இணையத்தில் வாழும் முத்தமிழ்

இணையத்தில் வாழும் முத்தமிழ் !
கவிதை by: கவிஞர் பூ.சுப்ரமணியன்

இறைவா !
எத்தனை கோடி இன்பம்
வைத்தாய் இணை(த)யத்திலே !
நீயும் இப்போதே
இறங்கி வரவேண்டும்
இணையத்திலே
மூன்று தமிழிலே
ஆடிப்பாடி மகிழ வேண்டும் !

கருவிலே இருக்கும் குழந்தையும்
குருவின் துணை இல்லாமலே
இணையம் என்னும் ஏட்டில்
திருவாசகம் நன்கு படிக்கும் !

பக்கத்தில் இணையம் இருந்தால்
பாலைவனத்தில் கூட நீ
முத்தமிழில் விளையாடலாம் !

ஒளவை வழங்கிய ஆத்திச்சூடி
ஆழ்வார்கள் பாடிய பாசுரங்கள்
கம்பன் படைத்த ராமாயணம்
கண்ணன் போதித்த கீதை
திருக்குறள் தேவாரம் திருவருட்பா
உருக்கமான நூல்களைத்தேடி
அன்று நூலகம் சென்றோம்
இன்று இணையதளம் சென்று
படித்து மகிழ்கிறோம் !

அன்று
தனிமையை விரட்ட
மனிதனிடமே பேசினோம்
இன்று
இணையத்தில் இணைந்து
இரண்டறக் கலந்து பேசி
இன்பமாக மகிழ்கிறோம் !

அன்று
தமிழோசை உலகெல்லாம்
பரவ வேண்டும்
பாரதி கண்ட கனவு
இன்று
இணையத்தில் நனவாகி
கண்டு மகிழ்கிறோம் !

பூ. சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை, சென்னை

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (16-Jul-17, 1:32 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 93

மேலே