கண் காணா தூரம் போய்விடு

=========================================
துன்பத்தின் தொடக்கவிழாவுக்கு
நாடா வெட்டும் சிறப்பு விருந்தாளியாய்
வந்த நீ திரும்பிப் போகவே இல்லை.

முன்னேற்ற பரமபதத்தில்
பாம்பாகி காலைப் பிடித்திழுத்து
ஆரம்ப நிலைக்கே கொண்டு சென்று
கைகொட்டிச் சிரிக்கிறாய்

அதிவிரைவு பாதை நடுவே
காற்றிழக்கும் சக்கரமாகி வண்டியின்
வேகத்தை தடுத்து நிறுத்தி
தாமதத்தின் ஊர்வழியே
கூட்டிச் செல்கிறாய் .

ஏமாற்றும் முகங்களை
இலவச அறிமுகஞ் செய்யும்
தேர்தல் காலமாய் நிழலாடும்
உன்னிடத்தில் வாக்களித்து வாங்க
எனக்கான இலவசங்களும் இல்லை.

பட்டினியின் முகவரி சுமந்த
பசி கடிதமாய் வந்துவிட்ட உன்னை
வாசிக்கும் வேதனைளை
வயிற்றுக்கு சொல்லி ஆறுதலடைய
வக்கற்றுக் கிடக்கிறேன்.

இல்லாமையின் பகிரங்க பதாகை
ஏந்திய உனது வருகை
ஊரெங்கும் என் வாழ்தலின்
துயரை விளம்பரம் செய்ய
வாடிக்கிடக்கிறேன்

வாடகைக்கு வந்த வீட்டில்
நிரந்தரமாய் தங்கிக் கொண்ட
தரித்திர நரி நீ

அளவுக்கதிக செல்வத்தை
பதுக்கிவைக்கும் செல்வந்தர்களாய்
அளவுக்கதிகமாய் வைத்திருக்கும்
என்னிலிருந்து நீ
விலகிவிடும் காலத்துக்காய்
காத்திருக்கிறது என் காலம்.

மகிழ்ச்சியின் கால்கள்
மனை வாசல் நுழையா வண்ணம்
மரித்து நிற்கும் வறுமையே..
சற்று பொறு..
என்னிடமிருக்கும் காலி உண்டியலை
கடைத்தெருவில் விற்றேனும்
கப்பலேற்றி விடுகிறேன் உன்னை.
கண்காணா தூரம் போய் விடு.
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (19-Jul-17, 2:53 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 101

மேலே