நம்பிடுவோம் நாமும்

​சட்டமிங்கு பட்டமாகி பறக்குது வானிலே
நட்டமிங்கு நம்பும் பாமரனுக்கு நாட்டிலே !
வட்டமிட்டு சுழலுது வாழ்க்கை பூமியிலே
திட்டமிட்டு சாயக்குது தீர்விலா முடிவிலே !

​வசதிகள் இருப்பின் வளைக்க முடியும்
அதிகாரம் இருந்தால் அசைக்க இயலும் !
சாமானியன் வாழ்வோ சரிவே இன்றும்
குடிமக்கள் நிலையோ தள்ளாடுது என்றும் !

வெட்டுப்பட்ட மரமாய் காயம்பட்ட உள்ளம்
கட்டுப்பட்ட மனதிற்கும் தட்டுப்பாடு இன்று !
சாதிமத சாயங்கள் அகன்றிடா நிலையின்று
போதிமர நிழலில் கொலையுண்ட உடல்கள் !

அரசியல் சகதியில் சிக்குண்ட மனிதமும்
அடியோடு வீழ்ந்தது அடையாளம் இன்றி !
சுயநலச் சுவடுகள் அனைவரின் நெஞ்சில்
சுற்றிச்சுற்றி வருகிறது பேராசை பேய்கள் !

அரிச்சுவடித் தெரியா அடிப்பொடிகள் இன்று
அரசியல் களத்தில் அடித்தளம் அமைக்குது !
ஆணவக் கொலைகள் அரங்கேறுது நாளும்
ஆவேசம் அடையுது வேடம் கலைந்ததும் !

பரிதவிக்கும் நிலையே பரிதாப மக்களும்
உரித்தான வழிகாட்டி உருவாகாத சூழல் !
கருவில் வருவானா வலிவான தலைவன்
உருவம் தெரிகிறதா உற்று நோக்குங்கள் !

கடமை ஆற்றுவதே மடமையும் ஆனதே
கண்ணியம் என்பதும் மறைந்தும் போனதே !
நல்லது நடக்குமென நம்பிடுவோம் நாமும்
அடுத்த தலைமுறை ஆனந்தமாய் வாழ்ந்திட !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (19-Jul-17, 8:46 am)
பார்வை : 390

மேலே