நயன்தாரா நாளை பள்ளிக்கூடம் போவாரா

நயன்தாரா நாளை பள்ளிக்கூடம் போவாரா.....?

பூந்தளிர் ஒன்று பாரிமுனை வீதியில்
புன்னகைத்து இளங்காற்றாய் திரிந்தது
அறிமுகமாகி அவள் நாமம் வினவினேன்
நைலாய் நெளிந்து நயன்தாரா என்றாள்
மகதியிவள் பெயரை மன்றாடி எழுதக் கேட்டேன்
மருண்ட விழியாலே மறுதலித்து விலகிச் சென்றாள்

மராட்டிய வழிவந்த மலைசாதி இனத்தவள்
பாசிமணி ஊசிவிற்று பசியாறும் குறமகள்
பச்சைக்குத்தி குறிசொல்லி குலம் வளர்க்கும் தாய்
பூனை எலி காகம் சுட்டு வளம் சேர்க்கும் தந்தை
படப்பை பூர்வீகம் பாதையோரம் குடியிருப்பு
நல்லதொரு நடமாடும் நாடோடிக் குடும்பம்

இயற்கை வைத்தியம், இல்லை இவர்களுக்கு நோய்நொடி
இயற்கையோடு வாழ்க்கை,பொழிந்தாலும் காய்ந்தாலும் பஞ்சப்படி
இல்லத் திருமணம்,அத்தைமாமன் பிள்ளைகள் உறவுப்படி
இரண்டாய் கிழித்த வைக்கோல்புல்லில் திருமணவிலக்கு பஞ்சாயத்துப்படி

இருபாலருக்கும் சமவுரிமை, இல்லை இங்கு பெண்ணடிமை
இளம் பிள்ளைகளை, மூத்தோர் காக்கும் கட்டான சமூகமுறை
இளம்பிஞ்சுகள் கையோடு, சிறு மகவுகள் முதுகோடு
இடம்விட்டு இடம்சென்றும் இணைந்து செல்லும் வாழ்க்கை முறை

ஏதோவொரு அரசுப்பள்ளி பதிவேட்டில் உறங்கும்
ஏழுவயது நிரம்பியும் ஏடுகள் தொடாத நயன்தாரா...
இயன்றவரை எடுத்துரைத்தேன் கற்றலின் அவசியத்தை
இன்று மாலையே ஊர்திரும்புவதாய் உறுதி தந்தனர்
நடைபாதையில் சுற்றித் திரியும் இந்த நயன்தாரா
நாளையாவது பள்ளிக்கூடம் செல்வாரா...?

அடுத்தவேளை உணவிற்காய் அலைந்து திரியும் இவ்வினம்
ஆர்.டி.இ விதிகளைப் பற்றி அறிந்திருக்க என்ன அவசியம்..?
நிரந்தர இல்லம் நிலையான பணி ஊதியம்
நிறைவாக அரசு தந்தால் நிமிர்ந்திடும் குறவர்குலம்!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை .அமுதா (21-Jul-17, 1:03 pm)
பார்வை : 99

மேலே