வேலையில்லா பட்டதாரி பாகம் -3

வானம் வழக்கத்தை விட மேக கூட்டமாக
காணப்பட்ட ஒரு மழை நாளில்...
தனியே சென்று கொண்டிருக்கிறேன்..
மழை வருமோ என அஞ்சி பாதசாரிகள்
ஒதுங்க இடம் தேட ஆரம்பிக்க,

மழை வந்தா வரட்டுமே என்று எதை
பற்றியும் கவலைபடாமல் சென்று கொண்டிருக்கிறது
கல்லூரி இளஞ்சிட்டுகள்..
பின்னாடியே சிட்டுகளை சுற்றும் காளைகள்...

இவர்களை போல தானே நானும் சுற்றிக்கொண்டிருந்தேன்..
இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை..


படித்தவுடன் வேலை கிடைக்க போகிறது...
சமூகத்தில் என் மதிப்பு உயரப்போகிறது...
சைக்கிள் பைக்காகும்..
பைக் கார் ஆகும்..
ஒட்டு வீடு மாடி வீடாகும்...

கனவுகள்.... கனவுகள்...
எல்லாம் கனவுகள்...


கல்லூரி சான்றிதழ் பைலை வெறுப்புடன்
பார்க்கிறேன்...

கடன் வாங்கி படிக்க வைத்த தந்தைக்கு
பாரமாய்...
ஒவ்வொரு முறை பணம் கேட்க
தந்தையின் கண் காண மறுத்து முகம்
தரை நோக்க...

என் மகனுக்கு நல்ல வேல கிடைச்சா
உனக்கு பால் குடம் எடுக்குறேன் தாயே
மரியம்மனுடன் டீலிங் பேசும்
அம்மா.....
அம்மாவின் வேண்டுதல் நிறைவேறாமல் இன்னும்
அப்படியே...

காற்று சற்று பலமாக அடித்து
சிகை கலைகிறது...
நடையை சற்று எட்டி போட்டேன்...
இருந்தும் மழை சட சடவென பெய்ய ஆரம்பித்து
விட்டது....

சற்றே தூரத்தில் தெரிந்த கட்டிடத்தை நோக்கி ஒடி
மழைக்கு ஒதுங்கி கொண்டேன்..
சிகரெட் எடுத்து பற்ற வைத்து கொண்டேன்...


பள்ளி காலங்களின் என்னுடன்
என்னை விட சுமாராக படித்தவர்கள் எல்லாம்
படிப்பை நிறுத்தி, கிடைத்த வேலைக்கு போய்

இன்று பல்சரிலோ அப்பாச்சியிலோ பறந்து கொண்டிருக்கிறார்கள்..
எதிர் பாராமல் பார்க்கும் நொடிகளில்

என்ன மச்சி நல்லா இருக்கியா...?

இருக்கேன் மச்சி...!!

என்ன பண்ணிட்டு இருக்க..?

வேல தேடிட்டு இருக்கேன்டா...

அடபாவி இன்னுமா...??
ஹா.. ஹா... ஹா...

நண்பனின் சிரிப்பு மனதை அறுக்கிறது....


என்ன படிச்சுருக்க...

பி.காம் மாமா...

என்ன வேல பாக்குற...??

சும்மா தான் இருக்கேன்...

சும்மா தான் இருக்கியா..??

ஏதாவது வேலைக்கு போலாம்ல...

உறவினர்களின் கேள்வி துரத்துகிறது...

அவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது
நல்ல வேலைக்கு போனும்னா சிபாரிசும்
பணமும் அவசியம் என....

ஸ்ஸ்ஸ்... ஆஆ....
சிகரெட் கையை சுட்டு விட்டது..
தூர எறிந்தேன்...

வேலை கேட்டு செல்லும் இடங்களில்
எல்லாம் நிராகரிப்புகள்...

வலிகள் வலிகள் மட்டுமே வாழ்க்கையாக....

சிரித்துக்கொண்டேன் இப்பொழுதெல்லாம் எதுவுமே
வலிக்கவில்லை...

மழை நின்றிருந்தது..
நடக்க ஆரம்பித்தேன்..

சைக்கிள் கார்கள் என் முன்னோக்கியும் பின்னோக்கியும்
என்னை கடந்து கொண்டிருக்கின்றன...

என்னை அறியாமல் என் கால்கள் எங்கெங்கோ
அலைகிறது...

சற்று தூரத்தில் கண் தெரியாத ஒருவர் கையில்
ஸ்டிக்குடன் நடந்து வந்து கொண்டிருக்கிறார்...
கையில் பை ஒன்று....

என் அருகில் வந்ததும்..

"சார் எனக்கு கண்ணு தெரியாது பக்கத்துல ஒரு
ஸ்கூல் இருக்கு சிரமம் பாக்காம என்ன அங்க
கூடி போய் விட முடியுமா...??

சரி வாங்க..

இருவருமே நடக்க துவங்கினோம்....

பள்ளிக்குள் நுழைந்து அவரை அனுப்பி வைத்தேன்....
இது நான் படித்த பள்ளி தானே...


எதிர் காலத்துல நீ என்னவாக விரும்புற...??

"பெரிய படிப்பு படிச்சு...
பெரிய வேலைக்கு போய்...
பெரிய வீடு கட்டி ...."
சிரித்துக்கொண்டேன்...


அப்பொழுதெல்லாம் கனவுகள்
பெரியதாக இருந்தது.....

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

உங்கள் விமர்சனத்தை எதிர் பார்த்து......
அருள்.ஜெ

எழுதியவர் : அருள் ஜெ (23-Jul-17, 10:33 am)
சேர்த்தது : அருள் ஜெ
பார்வை : 420

மேலே