சாதனை மங்கையர் திருநங்கையர்

சாதனை மங்கையர்... (திருநங்கையர்)

மனித இனத்தின் இருபால் சங்கமம்
மங்கையாய் திரிந்த மலட்டுச் சந்தம்
பெற்றவர் உற்றார் பெற்றனர் பரிகாசம்
உடன் பிறவிகளுக்கோ யாம் குலநாசம்

இரு குரோமோசோம்கள் மாற்றத்தில் வந்தது தொல்லை
இயற்கையை தடுப்பது எம்வசம் இல்லை
இயல்பாய் வாழ்ந்திடவும் இடமின்றித் தொல்லை
இடைப்பட்ட எம்பிறவிக்கு அங்கீகாரம் இல்லை

ஆழ்மன உணர்வும் ஹார்மோன்கள் இணைந்து
பெண்ணாக எமைக் காட்ட முனைகிறது
பொல்லாத உலகோ புற மாற்றத்தால்
அல்லாது பேசி படைப்பை பழிக்கிறது

வானை எட்டிப் பிடிக்கத் துடித்தோம்
விகற்ப இம்சையால் வீழ்ந்துத் தவித்தோம்
வன்மையில் வாட்டும் சமூகச் சூழல்
வல்லூறாய் கொத்தித் தின்பதை சகித்தோம்

வசைப்பட்டு வதைப்பட்டு வைராக்கியம் வளர்த்தோம்
வரம் கேட்டு மழுங்காமல் தரம்பெற்று தழைத்தோம்
கைத்தட்டி அழைத்தோர் கைக்கூப்பி வணங்கினர்
திருநங்கையர் எம்மை சாதனை மங்கையாய் துதித்தனர்!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (28-Jul-17, 2:05 pm)
பார்வை : 54

மேலே