விடுதலை பறவை நீ

தேயிலைத் தோட்டத்து மத்தியிலே நின்று
தேம்பி யழுகின்ற தோழனே என்றும்
தேம்பி யழுகின்ற தோழனே
வாயில்லாப் பூச்சியாய் வாழ்க்கையில் ஓங்காமல்
வாழ்ந்து மடிவது வேறுயார் – உன்போல்
வாழ்ந்து மடிவது வேறுயார்
காலையில் விடிந்ததும் கூடையை முதுகிலே
கவனமாய் சுமந்திடும் தோழியே – மெத்தக்
கவனமாய் சுமந்திடும் தோழியே
மாலை வரையிலும் மாடென உழைததுமே
மனது குமைவது வேறுயார் – உன்போல்
மனது குமைவது வேறுயார்.
எட்டடி வீட்டினில் இடுங்கியக் கூட்டினில்
இன்னலை சுமப்பது வேறுயார் – உன்போல்
இளிச்ச வாயன் வேறுயார்
கொத்தடி மைகளா யின்னும் தேயிலை
கொழுந்து பறிப்பது வேறுயார் உன்போல்
கொழுந்து பறிப்பது வேறுயார்.
தேயிலை வளர்த்திடும் நாடுகள் பலதிலும்
தெய்வமாய் இருக்கின்ற தோழனே இன்றும்
தெய்வமாய் இருக்கின்ற தோழனே
நாயிலும் கேவல மாகவே நினைக்கிறார்
நமது தேசத்தில் தானடா. அட
நமது தேசத்தில் தானடா
தொழிலினை வைத்து மனிதரை பார்க்கும்
துப்பு கெட்டவர் மனத்திலே எதற்கும்
துப்பு கெட்டவர் மனதிலே
எழிலுடன் நீதான் எழுந்து நிற்கவே
எழுத படித்துமுன் னேறடா நீதான்
எழுத படித்துமுன் னேறடா.
சரித்திரம் பூசிய கறையினை மாற்றிட
சலவை செய்யடா உனையே நீ
சலவை செய்யடா உனையே
விரித்திடும் சிறகால் விண்வெளி தாண்டும்
விடுதலை பறவை நீயே .உன்னில்
விடைபெறும் அடிமை நோயே!
*மெய்யன் நடராஜ்