சோலை வாழ்த்து
அல்லும் பகலும் அழகாய் மலர்ந்திடும்
வெல்லும் மரபில் விளைந்திடும் - பல்கலை
வித்தகரின் சோலை வெகுமதி யாம்நமக்குப்
புத்தகம்போல் நாளும் புரட்டு.
குவிந்த இதழ்களில் கொட்டு மெழிலாய்
கவியாட்சி செய்யும் கனிவாய் - செவியோரம்
தேன்பாய்ச்சும் பாவலர் தீந்தமிழ்ப் பாக்களும்
ஆன்மபலம் தந்திடும் ஆம்.
பண்பலையில் பாடலாய்ப் பல்விருந் தாகிடும்
எண்ணத்தி லென்றும் இனித்திடும் - வண்ணமாய்ப்
பூந்தென்றல் வீசும் பொலிவாய்க் கவியமுதம்
தீந்தமிழில் சிந்திடும் தேன்.
சோலையிதில் பாடல் சுகமாய்ப் பிறந்திடும்
காலைமுதல் மாலைவரை கானமழை! - பாலையிலும்
தென்றலாய்ச் சந்தங்கள் தேனிறைக்கும் இச்சோலை
மன்றில் மணந்திடும் மாண்பு.
நலம்பாடக் கூடினோம் நாமிங்கே ஒன்றாய்ப்
பலமாகக் கைத்தட்டிப் பாட - மலர்களும்
புன்னகைக்கும் வெண்பாவால் பூரித்துக் கொட்டிடும்
சின்ன யிதழ்கள் சிவந்து.
அறிவிற் சிறந்தநல் லாசான்கற் பிக்க
நெறியாய்ப் பயின்றோம் நிதமும் - சிறிதும்
கருவமில்லா பாவலர் காணிக்கை இங்கே
பெருமைக் குரியதுநம் பேறு.
அழகாய்க் கவிமழை அன்றாடம் கொட்டும்
நிழலாய்த் தொடரும் நினைவும் - பழகிட
யாப்பும் எளிதில் இனிதாய்ப் புரியவரும்
காப்பென்றும் சோலைக்கே காண்.