சித்தம் இசைக்குதொரு சிந்து

அலையலையாய் வருகிறது கீதம்...
மழைமழையாய் தருகிறது இதம்...
இருதயமும் நாடுகிறது சங்கீதம்...
உதடுகளும் அசைய, நாக்கு புரியும் நர்த்தனத்தில் எழுகிறது சரிகமபதநியென்றே சுரவரிசையில் சப்தம்...

சிந்தனையிலொரு உன்னதம் தோன்ற பயிற்சிக்கிறேன் சகலகலைகளும்...
சித்தம் பரப்பும் அதிர்வெண்கள் இசைக்கப்படுவதை உணர்த்துமொரு சிந்து பாடவே தொண்டைக்குழிக்குள் உருளுது ஒரு பந்து...
நெஞ்சம் அதிர இரைகிறேன் தேவையானதொரு கானம்...

புதுபது பாடங்களெல்லாம் நொடிப் பொழுது சிந்தனைப்பொறியில் பதிவேற சித்தம் தயாராகிறது பதிவேறிய யாவற்றையும் சந்தமெடுத்து சிந்து பாடவே...

புரியாதவையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டுமொரு சிறப்புமிகு தேடல்...
அத்தேடல் முடியும் வரை வேண்டுமொரு ஓடல்...
ஆன்மபலம் வெளிப்படும் நேரம் மாய்ந்திருக்கும் இவ்வுடல்...
அதுவரை இவ்வுடலே போராட்டங்களை ஈன்று ஞானத்தைப் பெற போர்தொடுக்கும் அனுபவக் கடல்...

அணுக்களின் ஆளுமையில் அசைகிறது அகிலமெல்லாம்...
ஆற்றலுக்கில்லை அழிவென்பதைப் புரிந்தால் ஆன்மாவும் ஆற்றலும் ஒன்றுபட வெளிப்படுகிறது செயல்! செயல்!
அச்செயலே நீ யாரென்பதைத் தீர்மானிக்கிறது இவ்வுலகிலும், எவ்வுலகிலும்...

புரிகிறதா நண்பா?

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (9-Aug-17, 5:55 pm)
பார்வை : 1134

மேலே