செய்வாய் மனமே

நான் நினைத்தால் தான், உன்னால் எதையும் செய்ய முடியுமென்று மனம் அகங்காரமாகக் கொக்கரிக்க அறிவு சொன்னது உன்னையெப்படி மகுடி வாசித்து அரவத்தை ஆட வைப்பது போல் உன்னை எப்படி செய்ய வைப்பதென்பதை அறிந்து கொண்டேன் என்றது அமைதியாக..
ஆழ்மனதிலே பூட்டிக் கிடந்த உணர்ச்சிகள், கற்பனைகளையெல்லாம் மனம் கட்டவிழ்த்துவிட்டு விட அறிவும் சமாளிக்குமா?
தாக்குபிடிக்குமா? என்றிருந்த தருணம் அறிவு மனதிடம் எடுத்துரைத்தது தனக்குப் பயன்படாவிடிலும் வேறு யாருக்காவது பயன்படுமென்று கடமையாற்ற வலியுறுத்தும் கர்மயோகத்தின் விளக்கத்தையெல்லாம்..
மனமும் கட்டுப்பட்டதோ?
ஆற்ற வேண்டிய கடமை உணர்ந்ததோ?
அறிவின் வழியிலே தனது கற்பனை சக்தியைத் திருப்பிவிடுகிறது..
அடடா! இது என்ன மாயம்!..
நானா இது?
என் கையெழுத்தா இது??
புதிரான வினாக்களுக்கு புரியாத விடைகளாய் புத்தகத்தில் இருப்பதெல்லாம் புரிகிறது இனிப்பின் இனிமை சுவைபோலே..
கசப்பையும் இனிப்பாய் உண்ணும் விந்தை புரியும் மனம் கிளிப்பிள்ளையாய் அறிவின் அறிவுரை ஏற்று கடமை செய்ய ஆரம்பித்துவிட்டதே தலைவனிட்ட ஆணையை மறுப்பில்லாமல் நிறைவேற்றும் படைவீரனாய்..
நாளை நாளையென்று நாட்களைக் கடத்தாதேயென்று கடமை செய்கிறது இந்த மனம்...
(எந்தப் பணியையும் அழகாய் செய்து முடிக்க மனதின் கற்பனையும் இரசனையும் தேவை...
படிப்பதைக் கற்பனை செய்யும் திறன் புரியாததையும் புரிய வைக்கிறது.. அதனால் ஆற்றும் கடமையில் ஒரு அர்ப்பணிப்பு உருவாகி ஆனந்தம் தோன்றுகிறது. )