சிலம்பின் நீதி

சிலப்பதி காரம் சொல்கின்ற சேதி
சிந்தித்து பார்த்தால் சிறப்பான நீதி

தரமற்ற மன்னவர் தன்னிலை மறந்து
அரசியல் பிழைத்தால் அறம் கூற்றாகும்

ஆடல் நாயகி மாதவி ஆட்டம்
அதைக்காணச் சென்ற கோவலன் மாற்றம்

பொன்வைத்த இடத்திலே பூவினை வைக்கலாம்
பொல்லாத மனிதரை வைப்பது நியாயமா?

முன்னவள் கண்ணகி மடியினை மறந்தான்
பின்னவள் மாதவி பிடியினில் விழுந்தான்

ஊழ்வினை ஓர்நாள் உறுத்த வந்தூட்டும்
பாழ்வினை பின்னாளில் பற்றியே வாட்டும்

கண்ணகி இழப்பு மாதவி பிழைப்பு
கண்அவன் என்பதே கண்ணகி நினைப்பு

கானல் வரிபாட்டு கலக்கத்தை தந்திட
காலெடுத்து கோவலன் வீட்டுக்கு முந்திட

விட்டதை பிடிக்கவே விரைந்தான் சிலம்பொடு
விரைந்தது விதியுமே வேலையை முடித்திட

மாதரி குடிலுக்கு மனையுடன் சென்றிட
ஆதரித் துதவினள் கவுந்தியும் கனிவுடன்

கையில் சிலம்புடன் கூடலுக்குச் சென்றவன்
கைதியாய் போனான் கதியற்று நின்றான்

கொல்லனின் வடிவிலே வந்தது வேதனை
கொற்றவன் தீர்ப்பு குலத்திற்கே சோதனை

செய்யாத குற்றத்தால் சிரமது வீழ்ந்தது
செய்தியோ கண்ணகி காதினில் சூழ்ந்தது

ஒற்றைச் சிலம்புடன் ஓடினாள் மதுரைக்கு
குற்றம் புரிந்தவன் கொற்றவனே காட்டினாள்

தேரா மன்னவன் தீர்ப்பு பிழைத்தால்
ஊருடன் சேர்த்து ஒருசொல் அழிக்கும்

பெண்மகள் குமுறவே நீதியும் கூறினால்
விண்மகள் விழிப்பாள் தீர்ப்புகள் திருத்த

சாமியாய் விளங்கிய மன்னவன் மயங்கி
பூமியில் வீழ்ந்தனன் பொன்னுடல் நடுங்க

நொடியில் நடக்கும் காட்சிகள் மாறும்
நிகழ்பவை எல்லாம் நிலைமாறிப் போகும்

பத்தினி சாபத்தைப் பித்தென நினைத்தால்
சத்தியம் ஓர்நாள் சுத்தமாய் எரிக்கும்

நினைவின் போக்கிலே நீதியும் கூறினால்
நிலமகள் விழிப்பாள் நிலையினை மாற்ற

கண்டதும் கேட்டதும் காவலன் தீர்ப்பெனில்
கருகிடும் வையகம் கனலதன் வாயினில்

கெட்டபின் பற்றிடும் கெட்டியாய் ஞானம்
முட்டியும் மோதியும் மாறுமா ஈனம்

மன்னவன் பாண்டியன் மந்தையில் ஒருவனோ?
மடமையில் திளைத்திடும் மன்னவர் தலைவனோ?

சிலம்பு உணர்த்திய உண்மைகள் மூன்று
சிந்தையிலா மன்னவன் சீரழிவே சான்று.

பாவலர். பாஸ்கரன்

எழுதியவர் : சொ. பாஸ்கரன் (12-Aug-17, 2:57 pm)
பார்வை : 167

மேலே