பிறந்தநாள் வாழ்த்துக்கள் மகனே

தத்தி தத்தி நடக்குமெங்கள் தங்கரதம் -தமிழை
திக்கித் திக்கிப் பேசுகின்ற சொல்லமுதம்
ஒத்தி ஒத்தி எடுக்கின்ற உதட்டுமுத்தம் -எம்
உணர்ச்சிகளை உடைத்துவிட்டு உயிர்த்தழுவும்

இரட்டைப்பல்லை கட்டியவன் சிரித்துவிட்டால் - அந்த
இமயம்கூட இறங்கிவந்து தூளியாகும்
ஒத்தைவிரல் காட்டியவன் குரல்கொடுத்தால்
ஆர்பரிக்கும் அலைகள்கூட அடங்கிவிடும்

பிஞ்சுக்கரம் நீட்டியவன் அழைத்துவிட்டால்
மேகக்கூட்டம் திரண்டுவந்து மெத்தையாகும்
வட்டமுகம் காட்டியவன் தலையசைத்தால்
வட்டநிலா ஓடிவந்து மாடிக்கொடுக்கும்

துள்ளித்துள்ளி குதித்து அவன் நடக்கையில்
துன்பமெல்லாம் பறந்துபோகும் வீட்டினிலே
தகப்பனுக்கும் தாய்மையினை தந்தவனே
தமிழ்போலே தழைத்திடவே வாழ்த்துகிறேன்.

ஆகத்து 15 ல் முதல் பிறந்தநாளைக் காணும் என் மகன் ''தருவி''க்காக.

எழுதியவர் : நிலாசூரியன் தச்சூர் (14-Aug-17, 12:36 pm)
சேர்த்தது : நிலாசூரியன்
பார்வை : 6644

மேலே