காகம் நிரப்பட்டும் !
நிறுத்திவிடு இறைவா
வயதின் ஓட்டத்தை .
என்னுடையதை அல்ல ,
என் பெற்றோரின் .
நித்தம் ஒரு யுத்தம் ,
மனதுக்கும் அறிவுக்கும் இடையே .
'நிறைவான வாழ்க்கை ,
நலம் வாழும் வாரிசுகள் ,
இன்னும் என்ன மனக்குறை ?'
எடுத்துரைக்கும் அறிவு.
எங்களை வளர்த்துவிட
அவர்கள் இழந்த
சுயமும், சுகங்களும்?
பட்டியலிடும் மனது.
தாகம் கொண்ட காகம் போல்
இட்டு நிரப்ப முயல்கிறேன்
நன்றிக்கடன் பாத்திரத்தை !
நிரம்ப மறுத்து நகைக்கிறது .
'கடனல்ல அது கடல் '
என்று புரிந்தாலும் ,
இறைஞ்சுகிறேன் இறைவா !
நிறுத்திவிடு வயதின் ஓட்டத்தை .
காகம் இயன்றவரை நிரப்பட்டுமே
நன்றிக்கடன்[ல்] பாத்திரத்தை !