எம்ஜிஆர் வாழ்க்கை வரலாறு
இளமைப் பருவம்
இராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தை மருதூர் கோபாலமேனன் வக்கீலாக கேரளாவில் பணிபுரிந்தார். தந்டையின் மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் எம்.ஜி.ஆர் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார்.
இவருடன் சக்ரபாணி என்ற சகோதரரும் நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்படத்துறையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி முதன்மை நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர். திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமாவார். காந்திய கொள்கைகளால் உந்தப்பட்டு, இவர் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.
இல்லறம்
எம்.ஜி.ஆருக்கு மூன்று மனைவிகள். முதலில் தங்கமணியை மணந்தார். பிரசவத்திற்காக தாய் ஊருக்கு சென்ற தங்கமணிக்கு குழந்தை இறந்தே பிறந்தது. அதன் பின் தங்கமணியும் உடல்நலக் குறைவினால் இறந்தார். அதன் பிறகு சதானந்தவதியை மணந்தார் எம்.ஜி.ஆர். இருவருக்கும் குழந்தைகள் இல்லை. பின்னர் சதானந்தவதி நோய்க் காரணமாக இறந்தார். இதற்கிடையே ஜானகி அம்மையாரை திரைப்படத்தில் கதாநாயகியாக சந்தித்தார். மூன்று படங்கள்தான் ஜானகியுடன் நடித்திருந்தாலும் காதல் பிறந்தது. எனவே ஜானகி தன் கணவரிடம் விவாகரத்து பெற்றுக் கொண்டார். ஜானகி அம்மையாருக்கு மகன் ஒருவனும் இருந்தான். இருந்தும் எம்.ஜி.ஆர். தான் காதலித்து வந்த வி. என். ஜானகியை மணந்துக்கொண்டார். மூன்று திருமணங்கள் என்றாலும் எம்.ஜி.ஆருக்கு குழந்தைகள் இல்லை.
வளர்ப்பு குழந்தைகள்
லதா ராஜேந்திரன், ராதா கோபாலகிருஷ்ணன், கீதா மதுமோகன், ஜானகி சிவராமன் ஆகியோர் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள்கள் ஆவார்கள். விஜயன் என்பர் வளர்ப்பு மகனாவார்.
கல்வி உதவி
எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா என்று எம்.ஜி.ஆர் 25ல் ஆனந்த விகடன் இதழ் குறிப்பிட்டுள்ளது.
செல்லப் பிராணிகள்
எம்.ஜி.ஆர் ராஜா-ராணி என்ற பெயர்களுடைய இரண்டு சிங்கங்களை வளர்த்தார். ராணி சிங்கம் இறந்துவிட ராஜா சிங்கமும் உடல் தளர்ந்திருந்தது. அது தனியாக இருக்க வேண்டாமென வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அளித்தார். நெடுநாட்கள் வாழ்ந்த ராஜா மறைந்த போது, அதன் உடலைத் தகுந்த ஆவணத்துடன் பெற்று, பாடம் செய்து தன் தி.நகர் வீட்டில் வைத்துக் கொண்டார்.
சிங்கங்களைத் தவிர எம்.ஜி.ஆர் தனது வீடு அமைந்திருந்த ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும் வளர்த்தார். இவற்றைக் கவனிக்க தனி மருத்துவரைப் பணியமர்த்தியிருந்தார்.
சிறுகுட்டியாக எம்.ஜி.ஆரிடம் இருந்த கரடி வளர்ந்ததும் மருத்தவரின் உதவியுடன் மூக்கில் சங்கிலி இணைக்க ஏதுவாக துளையிட முயன்றபோது எதிர்பாராத விதமாக இறந்துவிட்டது. இதை நடிகர் சங்கத்தின் நாளிதழில் ஒரு பேட்டியின் போது வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆரின் திரைப்பட வாழ்க்கை
1936ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை.
இச்சம்பவத்திற்குப் பின்னார் முதன் முதலாக வெளிவந்த திரைப்படம் காவல்காரன். இது மாபெரும் வெற்றிப் படமாகவும், திரையுலகில் அவரது ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது. 1971 ஆம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகராக, எம்.ஜி. ஆரை மத்திய அரசு தேர்வு செய்து, “பாரத்” விருதை வழங்கியது. இது சத்யா மூவிஸ் தயாரிப்பான “ரிக்சாக்காரன்” படத்தில் நடித்ததற்காக கிடைத்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 12 தியேட்டர்களில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி, வசூலைக் குவித்தது படம்.
அவர் நடித்துக் கடைசியாக வெளி வந்த திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன். தனது திரைப்பட நிறுவனத்தின் கீழ் எம்.ஜி.ஆர். மூன்று படங்களைத் தயாரித்தார்: நாடோடி மன்னன், அடிமைப் பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன். நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களை அவரே இயக்கினார்.
எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கை
எம்.ஜி.ஆர் மற்றும் எஸ்.எஸ்.ஆர் 1962-ல் நடந்த தி.மு.க கூட்டத்தில் இவர் ஒரு மலையாளியாக இருந்தும், ஒரு முன்னணித் தமிழ்த் தேசியவாதியாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் திகழ்ந்தார். அக்கட்சியின் பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். கருணாநிதியுடன் நட்பாக இருந்தார். சி. என். அண்ணாத்துரையின் மறைவுக்குப் பின், மு. கருணாநிதி முதலமைச்சரானதைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் ஏற்பட்ட முரண்பாடுகள் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேறினார்.
1972-இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவர் ஆரம்பித்தார். பின்பு அக்கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழமாக மாறியது. முதன் முதலாக போட்டியிட்ட திண்டுக்கல் பகுதியில் பெரும் வெற்றி பெற்றது.
திரைப்படங்களின் மூலம் அவரடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத் தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற உதவின.
1977ல் நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார். 1984 ல் கடுமையாக நோய்வாய்ப்பட்டும், தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் பிரசாரத்திற்கே வராமல் முதலமைச்சர் ஆன ஒரே முதல்வரானார் எம்.ஜி.ஆர். 1984 இல் இவரது ஆட்சிக்காலத்தில் மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். மறைவிற்குப் பின் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
இவரது கட்சி 1988-இல் பிரிந்து 1989-இல் இணைந்தது. 1991 முதல் 1996 வரையிலும், 2001 முதல் 2006 வரையிலும் 2011 முதல் இன்று வரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமைத்திருக்கிறது.
இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் திராவிடக் கட்சியில் இருந்தபோதிலும் தமிழ் நாட்டில் பலர் இவரைக் கடவுள் போலவே போற்றினார்கள். இவர் இறந்து 22 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் இவருக்காகவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். இது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த பெரும் செல்வாக்கைக் காட்டுகிறது.
எம்.ஜி.ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன், ஜனவரி 17, 1917 - டிசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தார்.