பிழைப் படி

நிதமொரு புயலதில் நீச்சல் போடும்
நினைவொரு மலரென ஆடும் பாடும்
விதவித அனுபவம் நாளும் நேரும்
விசித்திரம் அதுவரும் காலக் கோலம் !
எதுசரி எதுபிழை கவலை வேண்டா
எதிர்வரும் அவைமதி அறியும் தானாய் !
புதிர்வரும் கதையிது வாழ்க்கை ஆகும்
புதுவிதம் புதுமனம் நாளும் கூடும் !

கனவினில் நடப்பவை வாழ்க்கை இல்லை !
கவிதையில் வருபவை சேர்க்கை இல்லை !
மனமெனும் குதிரையின் பின்னே ஓடும்
மணமுடைப் பொழுதுகள் நாளும் வேண்டும் !
நினைவெனும் ஒருகுரல் தீண்டும் போதும்
நிழலென அதுகரை தாண்டும் போதும்
வினையதை அடக்கிடக் கற்றல் வேண்டும் !
விசையுடன் இருந்திடும் வழியே ஆகும் !

அறிவென ஒருகரம் நம்மைத் தாங்கும்
அழகிய பருவமும் இடையில் தாங்கும்
மறதியும் நினைப்பதும் வாழ்க்கை ஆகும்
மனமதன் எதிரினில் சண்டை செய்யும் !
நிறமென வகையெனப் பேதம் இல்லை
நிலவினில் கறைவரும் அழகும் உண்டு !
பிறவியின் பயனதைத் தேடல் வேண்டும்
பிழைகளைப் படியெனக் காணல் வேண்டும் !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (23-Aug-17, 12:30 am)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 47

மேலே