பிரித்தாலும் இணைவோம்

நீ முதலியார்
நீ கவுண்டர்
நீ தேவர்
நீ பள்ளர்
நீ பறையர்
ஆகவே பிரிந்துவிடுங்கள் என
அவன் சொன்னான்
இல்லை - நாங்கள்
இந்துக்கள் என்று சொல்லி
இணைந்து நின்றோம்

நீ இந்து
நீ இஸ்லாமியர்
நீ கிறிஸ்தவர் - எனவே
தனித்து நில்லுங்கள் என
அவன் சொன்னான்
இல்லை - நாங்கள்
தமிழர்கள் என்று கூறி
சேர்ந்திருந்தோம்

நீ தமிழன்
நீ கன்னடன்
நீ தெலுங்கன்
நீ மலையாளி -அதனால்
ஒதுங்கியிருங்கள் என
அவன் சொன்னான்
இல்லை நாங்கள்
தென்னிந்தியர்கள் என்று
ஒன்றாய் நின்றோம்

நீ வடஇந்தியன்
நீ தென்னிந்தியன்
இடைவெளி விட்டு வாழுங்கள் என
அவன் சொன்னான்
இல்லை - நாங்கள்
இந்தியர்கள் என்று
கரம்கோர்த்து வந்தோம்

நீ இந்தியன்
நீ ஜப்பானியன்
நீ சீனாக்காரன்
நீ சிங்கப்பூர்காரன்
கலவாதிருங்கள் என
அவன் சொன்னான்
இல்லை - நாங்கள்
ஆசியர்கள் என உரைத்து
ஆனந்தமாய் இருந்தோம்

நீ ஆசியன்
நீ அமெரிக்கன்
நீ ஆபிரிக்கன்
ஆதலால் நீங்கள்
சந்திக்காதீர்கள் என
அவன் சொன்னான்
இல்லை நாங்கள்
மனிதர்கள் என்று காட்டும்
மனதோடு வாழ்கிறோம்

இந்த "அவன்" யாரென்று
எங்களுக்கு புலப்படவில்லை
புரிந்திருந்தால்
அவனுக்கும்
ஒற்றுமையின் உன்னதத்தை உணர்த்தி
எங்களோடு இணைத்திருப்போம்

பிரித்தாழ நினைக்கும் அவனுக்கே
ஆயிரம் வழிகள் இருக்கும்போது
ஒன்று சேரத் துடிக்கும் எங்களுக்கு
ஒரு வழி கிடைக்காதா?

எழுதியவர் : விஜயகுமார் நாட்ராயன் (24-Aug-17, 1:06 pm)
பார்வை : 3475

மேலே