இணையம்

அணையா அழலென அணையில் நீரென
சுனையின் புனலென சுவைமிகு சேதிபல
பனையாய் உயர்ந்திட பாதைகள் பலகாட்டும்
திணையில் மாந்தர்க்கு இணையமோர் வரமன்றோ…!

உழவும் செழிக்க ஊர்தாகம் தீர்க்க
உயரங்குதித்து ஒருங்கே தேங்கும் நீர்க்கேணி..!
மனஐயம் தீர்த்து அறிவைப் பெறுக்கும்
இணையங்கூட அறிஞர் கூடும் அறிவுக்கேணி..!

சீழ்பிடித்த சிந்தையினால் ஊர்குடிக்கும் நீர்தனிலே
கீழ்த்தனமாய் கொடுநஞ்சை கீழோர்கள் கலப்பதுபோல்
பிஞ்சுகளும் பருகுகின்ற பேரிணையக் கேணியிலே
நஞ்செனவே நரிக்கூட்டம் பிணையுடலை படங்காட்டும்..!

ஆழி முழுவதும் ஆழமாய் நீரிருந்தும்
சுழையாடி மீன்கொத்தும் மீனெறிப் பறவைபோல்
எண்ணற்ற சேதிகள் இணையத்தில் இருந்தாலும்
எண்ணத்தை சீராக்கும் இனியவை தேர்ந்தெடுப்போம்..!

காமம் கருத்தை களவு செய்யாது
ஏமம் புரிந்திட இறைநிலை சிந்தையில்
வாசம் செய்திட நம்வாழ்வும் செழித்திடும்
நேசம் பூக்கையில் நல்வாசம் வீசிடும்..!

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (25-Aug-17, 3:08 pm)
பார்வை : 109

மேலே