கைதட்டல் ஓசை

அருகே இருந்தும்
பிரிந்தே இருக்கும்
இரு துருவங்கள்
இரு கரங்கள்

ஈகோ துறந்து
தன்னை மறந்து
உரசிக் கொள்ளும்
இவர்களின் முத்தத்தில்
எழும்பிடும் இசை
கைதட்டல் ஓசை

சேர நெருங்கவா
தூர போகவா
குழம்பி தவித்து
ஒத்திகை பார்க்கும்
ஒரு தருணம்
சேர்ந்து தாளமிடும்
இரு கரங்கள்

அனைத்தையும் மறந்து
அல்லன துறந்து
அன்பில் விழிமூடி
காதல் ஜோடிகள்
இதயம் இனித்து
இணையும் நேரத்தின்
மவுன ராகம்
(இருகை கூப்பும் )
இறைவேண்டல்

தானே கனிந்து
வெடித்த பழத்தின்
கனம் தாங்கும்
இரு இலைகள்
ஆச்சரியத்தில் பிளக்கும்
வாயைத் தாங்கும்
இரு கரங்கள்

எங்கோப் போகும்
மழைத் துளிகளை
தடுத்து நிறுத்தி
தேற்றி காக்கும்
அணையின் சுவர்கள்
கண்ணீரில் பனித்த
முகத்தை மூடிமறைக்கும்
சேர்ந்த இரு கரங்கள்

ஒரு குழந்தையின் கைதட்டல் தந்த கவியோடு
யாழினி வளன்

எழுதியவர் : யாழினி வளன் (25-Aug-17, 8:13 pm)
பார்வை : 197

மேலே