ரெட்டை ஜடை காதலியே
அம்மாவின் முந்தானை பிடித்து நடந்த என்னை
பள்ளியின் வாசலிலே இறக்கி விட்டு சென்றார் தந்தை
என் செய்வேன் என்றறியேன்
அழுத வண்ணம் நான் இருக்க
தான் கடித்து வைத்த இனிப்பில் மீதியை
என்னிடம் அழகாய் நீட்டினாள் அவள்
ஆளுக்கொரு இடமாய், அடுத்தவரை அடித்தபடி விளையாட
அடிப்பதில் ஏது ஆனந்தம் என
சிந்தித்து நான் நிற்கையிலே
என்னை விளையாட்டாய் அடித்து சென்றாள் அவள்
பூங்குழி என்றவளை நான் அழைத்த போதெல்லாம்
பூங்குழலி என்று சொல்லி
கன்னத்தில் குழி விழவே அழகாக சிரிப்பாள் அவள்
முதலாமாண்டு பெற்றோர் விழாவில்
ஆடல் நிகழ்ச்சியில் எனக்கான ஜோடி அவள்
என் தாயிடம் அறிமுகப்படுத்தினேன்
பூங்குழியை...
இம்முறையும் என்னை சரி செய்தவள் அவள் தான்
அன்று முதல் நான் கொண்டு சென்ற பலகாரம் இருமடங்கானது
அவளுக்கும் சேர்த்து...
காலங்கள் ஓடின..
5 ஆம் வகுப்பில் நான் நுழைந்த போதினிலே
என்னை அறியாமல் என் கண்கள் அவளை தான் தேடின
ரெட்டை ஜடை அணிந்து அழகாக ரிப்பன் சுற்றி
நெற்றியிலே பொட்டு வைத்து
வகுப்பறைக்குள் அவள் நுழைய
எவர் கண்ணும் அவள் அன்றி வேறெதையும் பார்க்கவில்லை
காதலெனும் வார்த்தைக்கான எழுத்துக்கள் அறியும் முன்னே
எனக்குள் வந்த உணர்வை என்னென்று நான் சொல்வேன்
குட்டை பாவாடை அவள் அணிந்தும்
பார்வை தப்பாக போனதில்லை
எட்டும் படி அவள் அமர்ந்தும்
கை விரல் தீண்ட நினைத்ததில்லை
நீ தான் என் உயிர் என்று
பொய் ஏதும் சொன்னதில்லை
அருகாமை போதுமென
என் நெஞ்சம் ஏங்குகையில்
இடியாய் விழுந்தது அவள் சொன்ன வார்த்தைகள் தான்
ஊர்விட்டு ஊர் செல்ல அவள் அப்பாவும் முடிவெடுக்க
அவளும் என்னை பிரிந்து
புது பள்ளி சென்று விட்டாள்
ஒரு மாதமோ இரு மாதமோ
அவள் அமர்ந்திருந்த இருக்கை கண்டு
நான் அழுதிருந்த நாட்கள் நினைவில் இல்லை
பள்ளி கால தோழி அவள்
நினைவு மட்டும் நெஞ்சோடு
அவள் பெயரை மறக்கும் போதெல்லாம்
என் மனதோடு அவளை அழைப்பதுண்டு
ரெட்டை ஜடை காதலியே...!!!