ஆட்டனத்தி -- ஆதிமந்தி
ஆட்டனத்தி -- ஆதிமந்தி -- எண்சீர் விருத்தம்
நட்சத்திரக் கவிஞர்களுக்கான போட்டி
ஆட்டனத்தி நடனத்தில் மயங்கி நின்று
------- ஆதிமந்தி காதலிலே விழுந்தாள் அங்கே .
வேட்டையாடும் இனத்தவனோ நீச்சல் தன்னில்
------- வேகமாக சாகசங்கள் செய்தான் ஆற்றில் .
வாட்டமுடன் இருந்தவளும் இதனைக் கண்டு
------- வகையுறவே மனத்தினையும் பறிகொ டுத்தாள்.
தேட்டங்கள் இல்லாத தேடும் காதல்
------- தேகத்தில் பற்றிடவே நேசம் கொண்டாள் !
கரிகாலன் முன்னிலையில் காவிரி யாற்றில்
------- காளையுமே நடனங்கள் புரிந்தான் ஆங்கே .
பரிகளுமே தோற்றுவிடும் நீச்சல் ஓட்டம் .
------- பாவியிவள் என்செய்வாள் கரையில் நின்றாள்.
அரியதொரு வாய்ப்பாக நினைத்து செய்த
------- ஆற்றினிலே ஆட்டனத்தி மூழ்கிப் போக
பெரியதொரு வெள்ளமொன்று அடித்துச் செல்ல
------- பெண்மகளாம் ஆதிமந்தி கண்ணீ ரோடு !!
ஆடியிலே பெருக்கெடுத்த காவிரி அன்னை
------- அன்பான காதலையும் பிரித்தாள் ஏனோ .
பாடிவரும் செல்வமகள் சோகம் தன்னைப்
------- பார்த்தவுடன் மனமிரங்கி மருதி என்பாள்
ஓடுகின்ற ஆற்றினிலே ஒதுங்கி வந்த
-------- ஒருமகனாம் திருமகனைக் அவளும் காண
நாடியுமே சென்றவளும் காத்து நிற்க
------- நலம்பேணும் அவளுடனே வாழ்ந்தான் ஆங்கே !
ஆதிமந்தி தேடுகின்றான் துயரத் தோடு
------- ஆட்டனத்தி காதலிலே வீழ்ந்த தாலே .
பாதியாக மெலிந்துவிட்ட தேகத் தோடு
------- பதியாக நினைந்தவனை எண்ணி எண்ணி .
ஓதியதோர் நற்சேதி மருதி சொல்ல
-------- ஓலமிட்ட நங்கையுமே மாற்றம் கண்டாள்.
நீதியாக கற்புநெறி வென்ற தன்றோ .
------- நிலைநிறுத்தும் காவியமே இஃது மன்றோ !
காதலிலே ஆதிமந்தி வென்று விட்டாள்
-------- கற்புநெறி மருதிக்கும் பொதுவில் வைப்போம் .
நோதலினால் உருகிநின்ற ஆட்ட னத்தி
------- நோயுற்ற தலைமகளைக் கண்டே ஏற்றான் .
பாதகமும் இல்லையினி காதல் வாழும் .
-------- பசலைக்கும் மருந்தாகும் காத லன்றோ .
மோதலின்றி வாழ்ந்தனரே தரணி தன்னில்
-------- மொத்தமுமே சிறப்பாக சொன்னேன் இங்கே !
கடலினிலே மருதியுமே பாய்ந்தே ஓடிக்
------- காதலினால் உயிர்விடவே நின்றாள் கற்பில் .
உடலினையும் மூழ்கடித்த கடலின் தாயும்
-------- உணர்வான காதலையும் ஏற்று நிற்க
சுடலைக்குப் போகின்ற போதும் இங்கே
-------- சுகமான காதலினை விட்டும் தந்து
மடலாகி நிற்கின்றாள் நம்மின் நெஞ்சில் .
------- மலரட்டும் சங்ககாலம் என்றும் வாழ்க !!!!
ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்