இளைஞர்களே- சிந்திப்பீர் செயல்படுவீர்
காசும் பணமும் கைநிறைய
கண்ணில் தூக்கம் இழந்தீரே...
பேசும் பழக்கம் குறைந்தேக்கைப்
பேசி தன்னில் குறுஞ்செய்தி
பாசம் சொல்லப் பகிர்ந்தீரே
பெற்றோர் மனத்தை மறந்தீரே
வாசப் பூவின் நுகர்வின்றி
வண்ணப் படத்தில் மகிழ்ந்திடவோ...
உண்ணும் உணவில் முறைத்தவறி
உறக்கம் கெட்டு உழைக்கின்றீர்
எண்ணிப் பார்ப்பீர் எதிர்காலம்
இருண்டே இருக்குத் தெளிவில்லை
கொண்டக் கொள்கை உயர்ந்திடுதல்
குற்றம் இல்லை உம்மனத்தில்
அன்னி யமோகம் அகன்றிட்டால்
அடையும் இன்பம் அழகாகும்
மண்ணை முட்டி வெளிவந்தே
விண்ணைத் தொட்டே வளர்ந்திடுமே
சின்ன விதையின் சிறப்பதனைச்
சிந்தை தன்னில் கொண்டீரே
தன்ன லமின்றி அத்திறத்தால்
தாய்நா டுயர முயன்றிட்டால்
திண்ணம் அறிவீர் அந்நாளில்
நம்நா டுயரும் வல்லரசாய்