தந்தை - மகள் பாசம்

தொட்டிலில் ஆடி உறங்கா நாளில்
உன் தோல் மீது உறங்குவேன்
எட்டி உதைத்த அன்பு வலியில்
சுகமாக நீயும் உறங்குவாய்.

நிற்க வைத்து அழகு பார்க்க
உன் கரம் பிடித்து எழுந்து நின்றேன்
நான் விட்டாலும் நீ விடாமல் இருப்பதால்
இன்றும் விழாமல் நிற்கிறேன்.

உந்தன் கை அனைத்து உறங்கும்போது
என் பலம் நான் அறிவேன்
உந்தன் கை பிடித்து நடக்கும்போது
எதையும் துணிவோடு நான் எதிர்ப்பேன்.

பள்ளி சென்ற பெண் இன்னும்
வீடு வந்து சேரலைனு
வீட்டு வாசலில் தாய் நிற்பாள்.
வீட்டு வாசலில் தாயை விட்டு,
பள்ளி வாயிலில் நீ நிற்பாய்.

கண்டித்த நாட்களில்
நான் உண்ணாமல் உறக்கம் கொண்டேன்
உண்ணாமல் உறங்குவேனென்று
அன்பாலே கண்டிப்பாய்.

கடை வீதி சுற்றி திரிந்தும்
கை நீட்டிக் கேட்டதில்லை
கண்ணாலே பார்த்ததை உணர்ந்து
என் கையில் கொடுத்து அழகு பார்ப்பாய்.

நான் ஏங்கும் உலகத்தை
என்னைக் கேட்காமல் தருகிறாய்
உனக்கான உலகத்திலும்
எனக்காகவே வாழ்கிறாய்.

அச்சம், மடம், நாணம் எல்லாம்
அன்பு கொட்டி அன்னை சொன்னால்
அச்சமில்லா பெண்ணாக வாழ
வாழ்க்கை நெறி நீ சொன்னாய்.

வாழ்க்கை நிலை மாற்றிக்கொள்ள
வெளியூர் சென்று வேலை என்றேன்
வழி தவறமாட்டேன்னு நம்பி
வாழ்த்தி நீ வழி அனுப்பி வைத்தாய்.

காதல் சொல்லும் தைரியம் உண்டு
காதலனை உன்னிடம் சொல்லும் தைரியமும் உண்டு.
உந்தன் அன்பிற்கு இணையாக
ஒரு காதல் நேர்ந்திருந்தால் ? சொல்லி இருப்பேன்.

எவ்வளவு சம்பாரித்தாலும்
வழி அனுப்பும்போது கொடுக்கும்
உன் வியர்வைக் காசுக்கு இணையாகுமா..?
இன்னொரு பிறவியிலாவது
உன்னை நான் தாங்கும்
வரம் கிடைக்குமா?

இங்கு யாவரும் சிரிக்க
நீ அயராமல் உழைப்பை
உந்தன் அழுகையை
யார் தான் அறிவார்?

பட்டம் படித்து முடிந்தும் கூட
உன்னை எழுதி முடிக்க முடியலையே?

முடிந்தால் மறு பிறவியில்
உந்தன் தாயாக
உயிர் பெறவேண்டும்.

எழுதியவர் : Mohanaselvam (2-Sep-17, 1:36 pm)
பார்வை : 8133

மேலே