உன்னால் இப்படி நான்
உன் நினைவுகளில் எரிந்து
என் இளமை சாம்பலாகிறது
உன் பார்வையில் அழிந்து
என் இதயம் தீயாகிறது
உன் வேர்வையில் குளித்து
என் ஆசைகள் அடங்குகின்றன
உன் போர்வையில் ஒளிந்து
என் கனவுகள் உறங்குகின்றன
உன் கூந்தலில் நுழைந்து
என் நிம்மதியைத் தேடுகிறேன்
உன் கூந்தல் அசைவில்
என் ஆண்மை ஆட்டம் காண்கிறது
உன் ஒற்றைப் பார்வையில்
என் ஆண்மை உச்சம் காண்கிறது
உன் ஓரவிழிப் பார்வையில்
என் இளமை மோட்சம் காண்கிறது
உன் தளிர் வட்ட முகத்தில்
என் உலகம் விழி திறக்கிறது
உன் இதழ் சிறு சிரிப்பில்
என் உளம் சிறிதாய் துளிர்க்கிறது
உன் கன்னத்துக் குழியில்
என் சலனம் ஜனித்துப் பிறக்கிறது
உன் கன்னத்து வெட்கச் சிவப்பில்
என் ஆண்மை முதல்முறை பூபெய்கிறது
உன் படபடக்கும் விழியசைவில்
நின்றுபோகிறது படபடக்கும் என் இதயம்
உன் சடசடப் பேச்சு சாரலில் நனைந்து
சடாலென சாய்கிறது என் உணர்வுகள்
உன் கபடப் பார்வையில் ஒருமுறை இறந்து
உயிர் பெறுகிறது என் காதல்
உன் நளினங்களின் நாட்டியத்தில்
அடங்காமல் முறுக்கேறுகிறது என் நரம்புகள்
உன் உதடுகளின் மவுனத்தின் விரதத்தில்
மரித்துப் போகிறது என் ஆசைகள்
உன் விழிகள் சொல்லிப்போகும் உண்மையில்
பறக்கத் தொடங்குகிறது என் கனவுகள்
உன் மாயங்களின் மயக்கத்தில்
மகுடியின் இசைக்கு ஆடுது என் இதயம்
உன் வனங்களின் ஏற்ற இறக்கங்களில்
தப்பாமல் சறுக்குகிறது என் மீசை முடிகள்
உன் அருகாமை விட்டுச் சென்ற வாசத்தை
மறக்காமல் ஒளித்து வைக்கிறது என் தாடி
உன் விழிஇறகுகள் தந்துப் போன நம்பிக்கையில்
இறக்காமல் வாழ தொடங்குது என் அன்பு
உன் காலங்களின் பெண்மை கொண்ட தயக்கத்தில்
விடைதெரியா குழப்பங்களில் மூழ்கிறது என் ஆசை
உன் பதிலில்லா கேள்விகளான பார்வையின் ஆழத்தில்
படையில்லா தலைவனாய் நிற்கிறது என் நேசம்
உன் நாடகங்கள் மறைக்கும் நேசத்தின் முகமூடிகளை கிழித்துவிட யாசித்து
உடை தேவையில்லா பறவையாய் வருகிறது மறைக்கப்படாத என் நேசம்