மனிதத்தின் விலை

நான்கு நாட்கள் முன்னர் பெய்த கனமழையில் குடிசையின் நாலாபுறமும் நான்கு வாசல்கள் வைத்தது போல் குடிசையின் ஓலைகள் குற்றுயிராய் கிடந்தது..
கொசுக்கள் படையெடுத்து பகலிரவு பாராமல் அவர்களின் குருதியோடு யுத்தம் செய்து கொண்டிருந்தது..
உணவு பொருட்கள் எல்லாம் தண்ணீரும் சாக்கடையும் கலந்த நீரில் தன் சுயத்தை இழந்து பதத்து போயிருந்தது..

மாலதியின் முகத்தில் கவலை ரேகைகள் முளைத்து ஆலமர கிளைகளாய் படர தொடங்கியது..தன் கணவன் கார்த்திக் இருந்திருந்தால் இப்படி தவிக்க வேண்டி இருக்குமா என்று பெருமூச்சு விட்டாள்.
அடுத்த வேளை உணவுக்காக காத்திருக்கும் அவலம் மிக கடினமானதாய் இருந்தது.
ஆறு வயதே நிரம்பிய மகன் சிவாவின் அழுகை சப்தம் கேட்டு திரும்பி பார்த்தாள்,
அம்மா பசிக்குதுமா,பசி வயித்தை கிள்ளுதுமா எதாச்சும் சாப்பிட தா என்று அன்னையின் முந்தானை சேலையில் முகம் புதைத்து கண் கலங்கினான்..
மாலதிக்கு என்ன செய்வது என்று புலப்பட வில்லை..அருகில் யாரிடமாச்சும் உணவு கேட்கலாம் என்றால் அவர்களின் நிலைமையும் அவ்வாறே இருந்தது..

திடீரென தைக்கா தெரு காதர் பாய் நினைவுக்கு வந்தார்...
சிவாவை இடுப்பில் தூக்கி வைத்து கொண்டு முட்டு அளவு தண்ணீரில் எதிர் நடை போட்டு கடையை நோக்கி நடக்கலானாள்..
கடை முற்றுமாய் இடிந்து போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தாள்.
அதிலிருந்த கடை சாமான்கள் எல்லாம் அப்புறப்படுத்தி கொண்டிருந்தனர்..

என்னமா தங்கச்சி இந்த பக்கம், காதர் பாயின் குரல் கேட்டு திரும்பினாள்..
இல்லண்ணே சும்மா அப்படியே வெளியில வந்தேன்.என்னண்ணே கடை இடுஞ்சு போச்சு என்று கவலையுடன் கேட்டாள்.
ஆமா தங்கச்சி கடை போனால் போகுது.இறைவன் நம்ம உசுருக்கு ஒன்னும் ஆக்கிறாமல் பந்துசா வைச்சிருக்காம்லா அதுக்காக நன்றிதான் செலுத்தனும் என்று சொன்னவரை ஆச்சர்யமாய் பார்த்தாள்.
இப்போதான் நாங்க சாப்பிட்டோம் நீங்க சாப்புட்டிங்களாண்ணே என்று கேட்டுவிட்டு காதர்பாய் பதில் சொல்லும் முன்,வீடு புல்லா தண்ணீர் கிடக்கு போய் அதை வெளியே இழுத்து விட்டுட்டு வாரேண்ணே என்று கிளம்பலானாள்.

ஜமிலா இங்க வாம்மா..நான்தான் கடை சாமான்களை அப்புற படுத்துதல மும்மரமா இருந்துட்டேன்.நீயாச்சும் ஞாபக படுத்தி இருக்க வேண்டாமா என்று தன் மனைவியை கடிந்து கொண்டார்.
தங்கச்சி சாப்பிட்டுச்சா இல்லையானு தெரியலை,பேச்சுக்குதான் சாப்பிட்டேன்னு சொல்லிட்டு போகுது.அதுவும் தேடி வந்து சொல்லிட்டு போகுது.
நம்ம கிட்ட உதவினு கேட்ட சங்கடப்படுது போல நீ போய் தங்கச்சிக்கு வேண்டியைதை எல்லாம் செஞ்சு கொடுத்துட்டு வா சரியா..
அப்படியே இந்தா இந்த பிளாஸ்க்ல பால் இருக்கு முதல்ல இதை எடுத்துகிட்டு போய் கொடு.பாவம் சிவா பசியிலே அழுது கண்ணுலாம் சிவந்து இருக்கு..

மாலதி வீட்டுக்கு திரும்பி வீட்டுக்குள் தேங்கி இருந்த தண்ணீரை வெளியேற்றி கொண்டிருந்தாள்.
ஜமீலாவை பார்த்ததும் அவளை அறியாமல் கண்ணீர் உதிர்த்தாள் மாலதி.
ஜமீலா கொண்டுவந்த பொருள்களை இறக்கி வைத்து விட்டு சென்றதும்,வீட்டை ஒதுங்க வைக்க ஒவ்வொரு பொருளாய் எடுத்து அடுக்கி கொண்டிருந்தாள்..

கடவுள் படம் போட்ட ப்ரேம் தண்ணீரில் மூழ்கி சிதிலமடைந்து கிடந்தது.
அதன் கீழ் கார்திக்கும் காதர் பாயும் ஒன்றாய் சேர்ந்து எடுத்த பால்ய பருவ புகைப்படம் சிறு புன்னகையை உதிர்த்து கொண்டிருந்தது..

மனிதமும் புன்னகைத்து கொண்டிருந்தது,
மதங்களை மறந்து..

எழுதியவர் : சையது சேக் (12-Sep-17, 5:19 pm)
சேர்த்தது : சையது சேக்
Tanglish : manithaththin vilai
பார்வை : 294

மேலே