ஒரு தாயின் கண்ணீர் .....

வண்ணங்களால் நிறம் கொள்ளும்
உன் ஆடைகளின்
சாயக்குளியல்களால் ஏன்?
கண் நரம்புகளின்
நிறம் கருப்பு வண்ணமாக !

மூச்சின் நுகர்தத்துவத்தை
உன் உயிர் அறியும்
ஆனாலும் ஏன்?
இயந்திரப் புகைகளாலும்
வேதியியல் வேள்விகளாலும்
என் மூச்செரிக்கிறாய்

கேட்கும் உறுப்பை எல்லாம்
உவகையுடன் உனக்களிக்கும்
மரங்கள் ,உன் வருங்கால
சந்ததியோடு வாழ விரும்பி கேட்டதை
தவறாக புரிந்துகொண்டாயா ?
உன் வீடுகளின் அலங்கரிப்பில்
உயிரற்று ஊமையாகிக்
கேட்கின்றன !

உணர்வுகளில் வேட்டு வைத்து
கல் எடுக்கிறாய் ,
தோள்களில் ஊசி ஏற்றி
நீர் எடுக்கிறாய் ,
வெற்றிடம் நிரப்ப
உடல் வெடித்துப்போகிறேன்
அதில் வீழ்ந்து மாயும்
யார் தார்மீக உணர்வேற்பது ?

சுவைக்கினிய மழைத்துளிகள்
சுவைமாறிப் போவதற்கு
காரணம்
நீ வானுக்கு வார்த்துக்கொண்டிருக்கும்
அமிலப் பாலின்
சுவைதானோ ?

என்னைப்போலோருத்தி
இந்த பிரபஞ்ச காட்டில்
உன்னுடன் வாழ விழைகிறாளாம்
தத்துக்கொடுக்க அழைத்திருக்கிறேன்
வருவதற்கு சில நூறு
வருடங்கள் ஆகுமாம்

அவள் வரும்வரை
வலிகள் இல்லாமல் வாழவிடு
உனக்காக என்னை ....

எழுதியவர் : இம்மானுவேல் (25-Jul-11, 9:49 am)
சேர்த்தது : Immanuvel
பார்வை : 474

மேலே