பேருந்து தேவதைகள்

திங்கட்கிழமை மந்தத்திற்கும்,
வெண்பொங்கல் கிறக்கதிற்கும்,
பிறந்த மூத்த குழந்தைப் போல தல்லாடி வந்தது
அந்த நகரப் பேருந்து.

அதன் இரும்பு இருக்கைகளும், கூட்ட நெரிசலும்,
கையில் அகப்பட்ட மனிதநேயத்தை
நய்யப்புடைத்து
சித்திரை வெயிலில் வாட்டிக்கொண்டிருந்தன
இரக்கமின்றி.

சாத்தனின் ஆயுத பட்டறையில் தேவதைகளா?
எச்சரித்த என் எரிச்சலை
தண்ணீர் குடித்து முழுங்கிய நொடி
சில காட்சிகள்.

சங்கடங்களை பொருட்படுத்தாது அன்பு செய்துக்கொண்டிருந்தன,
சில மெத்தனக் குழந்தைகள்;
சில பூமித் தேவதைகள்.

சன்னலிருக்கையில் தானமர்ந்து
வெயில் அரக்கனுக்கு முதுகை பலிக்கொடுத்து
தன் மனைவியிடம் காதல் வளர்க்கும் கணவன்.

தான் அத்தையாம்,
தன் மடியில் வாங்கி வைத்துக்கொண்ட மாற்றான் குழந்தை,
தரணியாளும் ராசவாம்;
ஒரு மணி நேர பேருந்துப் பயணத்தில்
உலக அரசியலை மாற்றிய தெத்துப்பல் அழகி.

‘பெண்ணடா நான்’ என்று காளயனிடம் காட்டம் காட்டி
இருக்கையை கவராமல்;
கால் கணத்து பூமிக்கிழுக்க,
மனது சிறகடித்து வானுக்கு பறக்க
எங்கோ நடுவில் நின்று அரட்டையடிக்கும் பெண்கள்.

சில்மிச சேட்டை செய்பவர்களை மட்டும் பொறுக்கி (என்று) அரற்றி;
கண்ணிய காதலர்கள் காதலில்
தன் பருவ காதலை எண்ணிக்களிக்கும்,
பிஞ்சு வெள்ளரி விற்க்கும் முதிர்ந்த அய்யா.

‘சீட்ட கொடுத்து விடுப்பா’ என்று சீறாமல்
சிரித்த முகத்துடன் சிட்டாக பறக்கும்
சில்லரை சித்தனாம் நடத்துனர்.

கண்டேன் என் தேவதைகளை!
தழும்ப தழும்ப தேவத்துகள்களால்
இப்பேருந்தை நிரப்பிக்கொண்டிருக்கும் இவர்கள்,
வெண்ணிலா மனிதர்கள்.

இந்த நவீன யுகத்தில்,
பம்பரமாய் சுழலும் இந்த உலகினூடே,
நத்தையின் தொனியில் நகரும் இப்பேருந்தும்,
பாடுபட்டு வெறுப்பை உமிழாமல்
சுலப அன்பை தூக்கி மூஞ்சியிலடிக்கும் இந்த சோம்பல் சிறார்களும்
அதிசயமே,
அதிமுக்கிய அத்யாவசியமே.

எழுதியவர் : ஹேமா (19-Sep-17, 5:00 pm)
பார்வை : 1544

மேலே