முத்திரைகள்
முத்திரைகள்
எவர் மீதான முத்திரைகளும்
நம் வசமிருக்கின்றன
முன்னெப்பொழுதோ
செய்யப்பட்டவை அவை
எவரையும் நிராகரிப்பதற்கும்
எவரையும் ஏற்பதற்கும்
எவர் வினை மீதும்
எவர் நிலை மீதும்
உண்மைகளை
கால மாற்றங்களை
ஒரு நாளும்
உணரவிடாத
முகத்திரைகள் அவை
காலாவதியாகியோ
பொருத்தமற்றோ
பொய்யாகவோ
போகிற முத்திரைகளை
நிதமும் துடைத்து வைத்து
புதுப்பித்துக்கொள்கிறோம்
நம்மை புனிதனாக்க
மாற்றான் மேல்
சேற்றிறைக்க
எதிரிகளை நண்பனாக்க
சம்மதமில்லை எவருக்குமிங்கு
ஏட்டுச் சமத்துவங்களை
ஏந்தி நிற்கிறோம்
ஆவியாகும் முன்
உப்பு நீரோ நன்னீரோ
உவர்மழை பொழிவதாய்
உரைத்து விடுகின்றன
உலர்ந்த நாக்குகள்
நமது கல்நிலங்கள்
பூத்தது போல்
அவர்களுக்கும்
நிதழ்திருக்கலாம்
எனினும் கற்களென
கருதியேவிழும் முத்திரைகள்
அகற்ற விரும்பாத
அகத்திரைகளாய்
விரிகையில்...
நிலாரவி.