மனிதனைத் தேடும் கடவுள்
மனிதனைத் தேடும் கடவுள்
============================================ருத்ரா
கடவுள் இது அல்லது அது
என்று சொல்லும்போது
அது கடவுள் இல்லை
இது கடவுள் இல்லை
என்று சொல்பவர்களின்
வாதங்கள் தான் உபனிஷதங்கள்.
இன்னும்
பிரம்மசூத்திரம்
நியாயவைசேஷிகம்
சாங்க்யம்
என்று சிந்தனையின்
"ஆற்றொழுக்கியல்" (லாஜிக்)
எல்லாம்
அந்த "இல்லைப்பாட்டுகள்" மூலம் தான்
சொல்லாடல் புரிகின்றன.
கடவுளைத் தேடும் மனிதன் என்பதெல்லாம்
மனிதனைத்தேடும் கடவுள் என்று தான்
பொருள் கொள்ளப்படவேண்டும்.
ஏனென்றால்
"கடவுள்" கருத்தை படைத்தவனே மனிதன்.
அந்த கருத்தோட்டம்
மனிதனுக்குள் புகுந்து குடைச்சல்
கொடுப்பதெல்லாம்
மனிதனுக்குள்ளேயே அந்த மனிதனைத்தேடி தான்.
அந்த "உருவெளி மயக்கத்தூண்டுதல்களே"
கும்பாபிஷேகங்களையும்
கும்பமேளாக்களையும்
ஈசல் கூட்டங்களாய் மொய்க்கச்செய்கின்றன.
இல்லாத அந்த ஒன்றுக்கு
ஒரு ஆயிரம் பெயர் சொல்லிப்பார்த்தாலாவது
அதை அலங்காரம் செய்யலாமா
(சஹஸ்ரநாமம்)என்பதும்
ஒரு பிள்ளை விளையாட்டு தான்.
அதையும் எல்லோரும் விளையாட்டுத்தனமாய்
விளையாடுவதில் ஒரு உற்சாகம் தான்.
"எல்லோரும்" என்ற உரிச்சொல்
மனிதனிடம் அப்பிக்கொள்ளும்
ஒரு மானிடவியல் அன்பை
மறைத்துப்பூசும் சாதி வர்ணங்கள் தான்
இந்த ஞானத்தின் பெருங்கடலை
சில குறுகிய ஸ்லோகங்களின்
"தொன்னைக்குள்" வைத்து
ஒரு ஆதிக்க அரசியல் செய்கிறது.
அறிவின் ஆழக்கடலில்
கடவுளைத்தேடி
நங்கூரம் வீசுபவர்கள்
இறுதியில் அது
இல்லை என்பதில் விழுந்துகிடக்கிறது
என்று
அறியாமல்
அல்லது அந்த அறியாமையில்
இன்பம் கொள்ளுகிறார்கள்.
அந்த அபரிமிதமான உணர்ச்சிவெறியில்
அவர்களை ஒத்துக்கொள்ளாதவர்களை
வதம் செய்கிறார்கள்.
கடவுளை ஒத்துக்கொள்ளவேண்டும்
என்ற வட்டமே
கடவுள் "அம்சமாய்"
இந்த அரசன் அல்லது அரச ஆதிக்கத்தையும்
ஒத்துக்கொள்ளவேண்டும்
என்ற பெரு வட்டமாய் விரிகிறது.
இதில் மக்கள் ஜனநாயக வட்டம்
சுறுங்கிப்போய் ஒன்றும் இல்லாமல் போகிறது.
இதை மதத்தின் "ஃபாசிசம்" என்று தான்
சொல்லவேண்டும்.
கடவுள் எனும் எல்லையில்லா கயிற்றின்
மறு முனையே
கடவுள் இல்லை என்பது.
சிந்தனையின் நேர்கோட்டை
முறித்து நசுக்கி
சிந்தனையே அற்ற பாழ்வனத்தை நோக்கி
பயணம் செய்வதே "கடவுளிஸம்"
முண்டியடித்து சிந்தனையை கூரான
சக்தியாக்கி வளமாக்கி பரந்த அன்போடு
புதிய உலகம் படைக்கும்
பார்வைகள் கொண்டதே "மனிதனிஸம்"
ஆத்திகம் விஞ்ஞானத்துக்குள்ளும் போய்
வேர் பிடிப்பது போன்ற
பார்வைகள் வலம் வருகின்றன.
அதையும் சிந்தனையியல் கொண்டு
பார்ப்பது
அறிவியல் வளர்ச்சிப்பரிணாமத்தில்
ஒரு படிக்கல் தான்.
எப்படியும் சிந்தனையை தேங்கச்செய்யாமல்
வைத்திருப்பது நாத்திகப்பார்வை மட்டுமே.
நாத்திகம் என்றால் உங்களுக்கு அலர்ஜி என்பது
உங்கள் சிந்திக்கும் ஆற்றல்
நோய்வாய்ப்பட்டிருப்பதையே குறிக்கும்.
================================================