சித்ப்பா

பாலா, கல்லூரி படிப்பு முடித்து, 6 மாதங்கள் ஆகி இருந்தன. தொடர்ச்சியாக வேலை தேடி வந்தான், பலனில்லை. ஆங்கிலப் பேச்சுத் திறன் சரிவர இல்லாததால், நேர்க்காணல்களில் சோபிக்க முடியாமல் போயிற்று. ஆங்கிலம் கற்றுக்கொள்ள எவ்வளவோ பயிற்சி செய்தான். சரளமாக பேச முடியும் என்ற நம்பிக்கை மட்டும் அவனிடம் வரவே இல்லை. அதற்கு காரணம், "தவறாக பேசி விட்டால், யாரேனும் எள்ளி நகையாடுவார்களோ என்ற பயம்". அவனது அம்மாவும் அப்பாவும் தினமும் நம்பிக்கை கூறி வந்தனர். அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை. இவர்களது உறவுக்காரப் பெண், தனது கணவன் மற்றும் இரு குழந்தைகளுடன், இவர்கள் வீட்டிற்கு விருந்தாளியாக வந்தாள். ஒரு குழந்தைக்கு ஒன்றரை வயதும் இன்னொரு குழந்தைக்கு நான்கு வயதும் இருக்கும். அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். பாலா குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது, அவன், அந்தச் சிறு குழந்தையிடம் தன்னை "சித்தப்பா" என்று சொல்லும்படி கெஞ்சிக் கேட்டான். குழந்தை "சிப்பா" என்று சொல்லியது. தவறாக கூறினாலும், அதன் மழலையை அனைவரும் ரசித்தனர். குழந்தையின் நான்கு வயது சகோதரி மட்டும் "தப்பா சொல்லுதும்மா...பாப்பா" என்று சொல்லி, அழகுற எள்ளிச் சிரித்தாள். பாலா கற்று தர, குழந்தை, தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே "சிப்பா, சிப்பா" என்று சொல்லியது..சிறுமி எள்ளிச் சிரித்துக்கொண்டே இருந்தாள். குழந்தை, எதையும் கண்டு கொள்ளாது, முயற்சி செய்து கொண்டே இருந்தது. திடீரென, குழந்தை "சித்ப்பா" என்று சொல்லி, கிட்ட நெருங்கியது.. உடனே, உற்சாகக் குரல் வீட்டைப் பிளந்தது. "தவறாக பேசினால், எள்ளி நகையாடுவார்கள்" என்ற வீண் பயம் குழந்தைக்கு இருந்திருக்கவில்லை. தொடர் முயற்சி மட்டுமே அதனிடம் இருந்தது. "பிழை செய்தால் மட்டுமே, அதை, களைக்க முடியும். பிழை செய்தால் மட்டுமே, பிழைக்க முடியும். " என்பதை உணர்ந்தான் பாலா. தன்னுடைய, வீண் பயம் மற்றும் கூச்சத்தைக் களைந்தான். மகிழ்ச்சியுடன், ஆங்கிலத்தில் பிழை செய்யத் தொடங்கினான்.
சுருக்கம்:
ஒரு சிறு குழந்தை, சுமார் இரண்டு வருடங்களில், தனது தாய்மொழியில் பேச, நன்கு கற்றுக்கொள்கிறது. ஆனால், பெரியவர்களாகிய நாம், இருபது வருடம் பயின்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசமுடிவதில்லை. தவறாக பேசி விட்டால், யாரேனும் நகையாடுவார்களோ என்ற வீண் பயமே இதற்கு காரணம். பயம் களைவோம், பயணம் தொடர்வோம்.

எழுதியவர் : தமிழ்ச் செல்வன் (2-Oct-17, 7:27 pm)
பார்வை : 253

மேலே