செய்தித்தாள் ஒரு வரப்பிரசாதம்

மாணவர்கள் அனைவரும் அவசியம் செய்தித்தாள்கள் படிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் அந்த பழக்கமானது மாணவர்கள் மத்தியில் இன்னும் அதிகரிக்கவில்லை என்றே ஆய்வுகள் கூறுகின்றன. செய்தித்தாள் படிப்பதன் பரவலான நன்மைகளை பல மாணவர்கள் இன்னும் முழுமையாக உணர்ந்து கொள்ளவில்லை. இதனால் அவர்கள் பல விஷயங்களை இழக்கிறார்கள். செய்தித்தாளை தொடர்ச்சியாக படிப்பதால் பொது அறிவு சம்பந்தமாக மட்டுமின்றி பாட ரீதியாகவும் எத்தகைய நன்மைகள் கிடைக்கின்றன என்பதை மாணவர் சமூகம் உணர்ந்து கொண்டால், அதிக நன்மைகளைப் பெற முடியும்.

* தமது படிப்பு, பள்ளி, குடும்பம், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகிய குறுகிய வட்டத்தை தாண்டி, தாம் வாழும் உலகம் எவ்வளவு பெரியது, எவ்வளவு அம்சங்களை உள்ளடக்கியது என்ற ஒரு பார்வையை செய்தித்தாள்களின் மூலமே மாணவர்கள் எளிதில் பெற முடியும்.

* செய்தித்தாள்களை தினமும் படிப்பதன் மூலம் படிக்கும் வேகமும், படிக்கும்போது புரிந்துகொள்ளும் வேகமும் அதிகரிக்கிறது. இந்த இரண்டு திறன்களும் படிப்பிற்கு பெரிதும் பயன்படுகின்றன.

* ஒரு செய்தித்தாளில் பலதுறை சம்பந்தப்பட்ட நிபுணர்களின் கருத்துக்களும், அத்துறை சம்பந்தமான தகவல்களும் இடம்பெறுகின்றன. எனவே அவற்றை படிக்கும்போது மாணவர்களின் அறிவு விரிவடைந்து, பாடங்களை படிக்கையில் எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது.

* தமிழ் மற்றும் ஆங்கில செய்தித்தாள்களில் தேர்வு சம்பந்தமான மாதிரி வினாத்தாள்கள் வருகின்றன. அது மாணவர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாய் இருக்கிறது. மேலும் மொழியறிவை வளர்த்துக்கொள்வது சம்பந்தமாய் பல ஆலோசனைகள் மற்றும் உதவிக் குறிப்புகள் இடம்பெறுகின்றன.

* செய்தித்தாளில் பூகம்பம் அல்லது வெள்ளம் அல்லது கலவரம் போன்ற ஏதேனும் ஒன்றைப் பற்றி நீங்கள் ஆர்வத்துடன் படிக்கையில், தேர்வின்போது அதுசம்பந்தமாக கட்டுரைகள் கேட்கப்படும்போது உங்களுக்கு யோசித்து எழுத எளிதாக இருக்கும்.

* ஆங்கில செய்தித்தாள்களை படிக்கும்போது ஏராளமான புதிய வார்த்தைகள் நமக்கு அறிமுகமாகும். வழக்கமாக படிக்கும்போது அவை நம் நினைவிலும் நின்றுவிடும். இதன்மூலம் நமது மொழியறிவு வளர்வதோடு, பாடம் சம்பந்தமாகவும் நன்மை ஏற்படும்.

* மேலும் செய்தித்தாள்களில் புதிர் விளையாட்டுக்களும் இடம் பெறுகின்றன. இதன்மூலம் மூளைக்கு நல்ல வேலை கிடைக்கிறது. இதைத்தவிர எந்தெந்த விளையாட்டு எப்போது ஒளிபரப்பாகும், திரைப்படங்கள் மற்றும் இதர பொழுபோக்கு நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்களும் செய்தித்தாள்களில் கொடுக்கப்பட்டிருப்பதால், உங்களின் ஓய்வு நேரத்தையும் திட்டமிட முடியும்.

* செய்தித்தாளை தினமும் வீட்டில்தான் வாங்கி படிக்க வேண்டும் என்பதில்லை. பள்ளி, கல்லூரி நூலகத்திலோ அல்லது ஊரில் இருக்கும் அரசு மற்றும் தனியார் நூலகங்களிலோ, வாசக சாலைகளிலோ செய்தித்தாள்கள் கிடைக்கும். நம் வசதிக்கு தக்கபடி அமைத்துக் கொள்ளலாம்.

செய்தித்தாள்களை தவறாமல் படிக்கும் பழக்கத்தை ஒரு மாணவர் வளர்த்துக்கொண்டால் அவர் நினைப்பதைவிட அதிக நன்மைகளைப் பெற முடியும். அவரின் அறிவு விசாலமடைந்துள்ளதையும், அந்த அறிவு படிப்பிற்கும் நன்கு பயன்படுவதையும் அவர் நிச்சயம் உணர்வார்.

எழுதியவர் : (3-Oct-17, 2:02 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 3031

மேலே