கண்சிமிட்டும் கார்முகில்

கண் கூசும் சூரியன் இன்னும் மறையவில்லை,
கடிகார முள்ளும் மாலை நேரத்தை தொடவில்லை - ஆனால்
கார்மேகம் வானம் சூழ ,
கண்டதை எங்கனம் சொல்வேன் ,
காலமும் மாறியது இட்ட கோலமும் மாறியது !

மைதான நடுவில் நின்றபடி வானம் நோக்க ,
மாயம்போல மிரட்டும் கதிரவன்
மயக்கம்க்கொண்டு மறைந்தே போனான்
மன்றாடி தப்பித்து போனான் மேகத்திடம்,
மேகமது விரைந்து எறிவர சிதறியது கருமை !

இசையோடு இசைந்து மின்னலும் வந்தான்
இறுக்கி மூடினேன் கண்களை -பின்னர்
ஏறெடுத்து பார்த்தால் என்ன விந்தை ,
இசைக்கொண்ட மின்னலின் இடுக்கில்
இமையினையும் சிலிர்க்க செய்யும்
இன்றும் பார்த்து யாரும் அடைந்திடாத வைரம் துரிகையாய் !

அறிவு இடம்விட்டு வீடு செல் என்கிறது ,
ஆனால் அகமோ மாட்டேன் போ என்று வாதம்கொள்கிறது !
அள்ளித்தூவும் துரிகையோடு நடந்தேன் மெல்ல மெல்ல ,

இகமெங்கும் யாருமில்லை
இருட்டும் அதில் வைரமுமே மிச்சம் !
இசைவோடு அசைந்தபடி வீடு சேர்ந்தேன்,
இசையொன்றை அவையெழுப்ப அதற்கேற்ப
இனித்திடும் கவியொன்றை நான் எழுத முயன்றேன் !

எழுத நான் எழுந்த நொடி
என்னை இழுத்தன இசையெழுப்ப
ஏறி வானம் வா என்று !
என்னை அழைக்காதே இனித்திடாது என்று நான் கூற,
எங்கனம் என்று பார்ப்போம் என்று இழுத்திட்டன !

செய்வதறியாது நானும் சேர்ந்தேன் ,
சிலிர்க்க செய்யும் குளிர்க்காற்றிற்கு இதமாய்
சிமிட்டும் நிலா அவளின் மடியில் மெத்தை ,
செல்ல சாரல் எனை உரச ,
சீண்டும் மழையோடு செல்ல சண்டையிட்டேன் !

நேரம் செல்ல செல்ல
நகரா வேலைகளை எண்ணி
நிலாவிடம் விடைபெற்று
நகர்வலம் வந்த தென்றல் துணையோடு வீடு வந்து சேர்ந்தேன் !!!

எழுதியவர் : ச.அருள் (9-Oct-17, 6:47 pm)
பார்வை : 581

மேலே