மாயா

திருமண மண்டபத்தின் வாசலில் பத்து அடிக்குமேலே உயரமான பேனர் கட்டப்பட்டிருந்தது. அந்த பேனரில் மாயாவின் பெயருக்கு பக்கத்தில் வேறு ஒருவரின் பெயரை பார்க்க மனமில்லாமல் மனதுக்குள் குமுறிக்கொண்டிருந்தான் கார்த்தி.
கார்த்தியும் மாயாவும் பள்ளிப்பருவத்தில் இருந்தே காதலித்தவர்கள். கார்த்தி கனத்த இதயத்தோடு வாசலில் நின்று பேனரை வெறித்து கொண்டிருந்தபோது.......
தம்பி வாசலிலேயே ஏன் நிக்குறீங்க உள்ள வாங்க என்று ஒரு குரல் கேட்டது. திரும்பி பார்த்தான் மாயாவின் தந்தை. வராத புன்னகையை முகத்தில் போலியாக வரவழைத்துக்கொண்டு மண்டபத்திற்குள் நுழைந்தான் கார்த்தி.
மண்டபத்தில் நல்ல கூட்டம் முன்வரிசை இருக்கைகளில் ஆட்கள் இருந்ததால் கடைசி வரிசையில் ஒரு நாற்காலியில் அமர்ந்தான் கார்த்தி.
அவன் மனதுக்குள் எதோ ஒரு குற்ற உணர்வு நாம் ஒரு மருத்துவராக இருந்திருந்தால் அவளை திருமணம் செய்ய எந்த தடையும் இருந்திருக்காது. மருத்துவருக்கு தான் என் பெண்ணை கொடுப்பேன் என்று மாயாவின் தாய் சொன்ன வார்த்தைகள் அவன் காதில் இன்னும் ஒலித்துக்கொண்டிருந்தது.
திருமண மேடையில் மாயா பக்கத்தில் வேறொருவன் நிற்பதை பார்க்கும் போது கார்த்தியின் கண்களில் கண்ணீர் அடக்க முடியாத வெள்ளம் போல வந்தது.
அப்பொழுது யாரோ ஒருவர் நல்ல ஜோடி என்று பேசிக்கொண்டிருந்த வார்த்தை இவன் காதில் கூர்வாளால் குத்தியது போல இறங்கியது.
ஆமாம் நல்ல ஜோடி என்று மனதுக்குள் திட்டிக்கொண்டிருந்தான்.
மேடையில் நிற்கும் திருமணமான ஜோடியை பார்க்க தன் தலையை ஏறிட்டு பார்த்தான்.
சிவப்பு நிறபட்டு புடவை அணிந்திருந்தாள் மாயா!
"சிவப்பு நிற சேலையில் நீ மகாலட்சுமி மாதிரி இருப்படி" என்று என்றோ மாயாவிடம் கார்த்தி சொன்னது அவனுக்கு நினைவில் வந்தது.
அவள் சிரித்த முகத்தோடு அவளுடைய கணவனோடு பேசிகொட்டிருப்பதை பார்த்த அடுத்த நொடி கார்த்திக்கு உயிரே போனது போல இருந்தது.
தன்னை உண்மையிலேயே காதலித்தாளா? என்கிற குழப்பம் அவனுக்கு வந்தது. தன்னுடைய காதல் தோற்றுப்போனதை எண்ணி அவள் வருந்தவே இல்லை. "நீ இல்லனா நான் செத்து போய்டுவேண்டா" என்று மாயா சொன்ன வார்த்தைகள் அத்தனையும் பொய்யா என்று கார்த்தி துடி துடித்துப்போனான்.
அப்பொழுது மாயாவின் தோழி திவ்யா கார்த்திக்கு பக்கத்தில் வந்தாள். அண்ணா நீங்க ஏன் இங்க வந்திங்க என்றாள்.
என்ன சொல்வதென்று கார்த்திக்கு தெரியவில்லை "எப்போ வந்திங்க" என்று வழக்கமாக கேட்பவள் இன்று "ஏன் வந்திங்க" என்று கேட்டதை கார்த்தி எதிர்பார்க்கவில்லை.
திவ்யாவிடம் எதுவும் பேசாமல் தன் கையில் இருந்த பரிசுபொருளுடன் மேடையை நோக்கி நடந்தான்.
மேடையில் புகைப்படத்திற்க்காக போலியாக சிரித்து கொண்டிருந்தார்கள். தன் மனதில் இருந்த துக்கத்தை அடக்கியவனாய் மேடைமீது ஏறினான்.
மாயாவின் கணவருக்கு வாழ்த்துக்கள் ப்ரோ என்று கைகுலுக்கினான்.
அந்த தருணம் மாயா தன் கணவனிடம் "இவர் என்னோட ஸ்கூல் நண்பன், என்னோட அண்ணன் மாதிரி என்றாள்"
இவள் சொல்வது பொய் என்று தெரியாத அவள் கணவர் கார்த்தியை பார்த்து புன்னகைத்தார்.
அதுவரை துக்கமாக இருந்த கார்த்திக்கு மாயா சொன்ன பொய்யை கேட்டதும் உண்மையிலேயே சிரிப்பு வந்தது.
அவர்களை நிழற்படம் பிடித்தவர் சொன்னார் இப்பொழுதுதான் ஒரு செயற்கைத்தனம் இல்லாத சிரிப்புடன் கூடிய நிழற்படம் எடுக்க முடிந்தது என்று.

எழுதியவர் : மொழியரசு (12-Oct-17, 5:14 pm)
சேர்த்தது : மொழியரசு
Tanglish : maya
பார்வை : 420

மேலே