காலம் ஆளும் கலாம்
![](https://eluthu.com/images/loading.gif)
அறிவியல் நேசன் அரசியல் ராசன்
அரும் புகழ் பாடுகிறோம் ! - அவன்
நெறியினைப் போற்றி நேரிய வழியின்
நேர்மையில் ஓடுகி்றோம் !
வனமெனும் வாழ்வில் நாமும் நடக்க,
வரும் துணை அவன் மொழிகள் ! - இன்று
கனவுகளை நாம் காணுகின்றோம் அவன்
கண் எனப் பல விழிகள் !
வானங்கள் நூறு வசப்பட லாகும்
வாடாது எழுக வென்றான் ! - கலாம்
கானம் இசைத்தான் கடமைகள் செய்தான்
கடவுளை வணங்கி நின்றான் !
அக்கினிச் சிறகை விரித்தவன் வானை
அறிவினில் அளந்து நின்றான் ! - நாட்டு
மக்களுக் காக மாண்புகள் செய்தான்
மாதவம் வென்று விட்டான் ! (கலாம்)
சாதனை செய்ய முயற்சிகள் வேண்டும் !
சாட்சி கலாம் தானே ! - பல
போதனை தந்த வேந்தனை நாமும்
போற்றிப் புகழ்வோமே !
மானிட உருவில் மண்ணில் இறங்கிய
மாபெரும் கதிரொளி தான் ! - இருட்
கானிடை தோன்றிய தீப்பொறி அவனே
காலத்தை ஆளுகின்றான் ! (கலாம்)
-விவேக்பாரதி
15.10.2017