மனதிலே உட்கார்ந்து மணியடித்தாய்
மோகத்தால் காதல் கொண்டு
..... மூழ்கியதென் மனமே; காதல்
தாகத்தைத் கொடுத்து என்னைத்
..... தவிக்கவே விட்ட பெண்ணே
மேகம்போல் கண்ணீர் சிந்தி
..... விழிகளும் துடித்த திங்கே
சோகத்திலே துன்பம் வந்து
..... சூழ்ந்தது எந்தன் வாழ்வில்
அழியாத காதல் நெஞ்சில்
..... அளவிலாது நிறைந்தி ருக்க
விழிகளின் வழியே கண்ணீர்
..... விழுந்துநனைந் ததென் தேகம்
வழிகிற கண்ணீர் தீர்ந்து
..... வாடுகிறதென் மனமும்; வாழ்வில்
வழியுமில்லை; பிரிந்து செல்ல
..... மனமுமில்லை நானென் செய்வேன்?
மனதிலே அமர்ந்து நீயும்
..... மணியடித்தாய் அன்று; அன்பே
தினமுமே வாடும் என்னைத்
..... தேடிவ ராத தேனோ?
உனக்கெனவே நானி ருந்தேன்
..... உன்வரவை பார்த்தி ருந்தேன்
எனதருகே வருவாய் என்றே
..... எண்ணிநான் காத்தி ருந்தேன்
ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்