தகப்பன்சாமி
என் அப்பா எம் ஆத்மாவின் சரிபாதி
எங்கள் வாழ்வின் இருள் நீங்க
அன்பொளி ஏற்றிய அருட்பெரும்ஜோதி
உன்னதமான உழைப்பைக் கொடுத்து - எங்கள்
சிரமம் தீர்த்த சீதக்காதி
இந்த எழுத்து - எங்கள்
சிந்தையோடு கலந்த தந்தையின்
அந்தமும், ஆதியும் சேர்ந்த அந்தாதி
பிரிவால் தொலைந்த இதயத்தைப்
பரிவால் கண்டறிந்து தேற்றி
கனிவால் எம் காயங்களை ஆற்றி
கடவுள் போல வானுயந்து நிற்கும்
தந்தையே போற்றி போற்றி..
இந்த எழுத்துக்களுக்கு
நிறம் கிடையாது - காரணம்
இவை அனைத்தும்
கண்ணீரால் எழுதப்பட்டது
வெள்ளைச் சட்டை
வெள்ளை வேட்டி
வெள்ளந்தி மனசு
நெற்றி நிறைய திருநீறு
கருணையே உருவான கண்கள்
களங்கமில்லாத சிரிப்பு
காம்பு கிள்ளிய வெற்றிலை
காலணா அளவு தெக்கம்பாக்கு
வாசனை சுண்ணாம்பு டப்பா
இதுதான் எங்கள் அப்பா
உறவுகள்தான் உயிர்மூச்சென வாழ்ந்தார்
அதுதான் அவர் செய்த தப்பா?
எரியும் நெருப்பினில் வேகும்
தங்கங்கள் யாவும்
நகையாகத்தானே மாறும்
எங்கள் நெஞ்சத்தில் வாழும்
தந்தையெனும் தங்கமோ
புகையாக மாறிக்
காற்றோடு கலந்துவிட்டார்
நந்தனா உங்களை அழைக்கிறாள்
ஸ்ரீஹரி உங்களைக் கேட்கிறான்
கிருத்திக் உங்களையெப் பார்க்கிறான்
குழந்தையும் தெய்வமும் ஒன்றுதானே
தெய்வம் அழைத்தபோது சென்ற நீங்கள்
குழந்தைகள் குரலுக்கு வந்தாலென்ன?
எங்கள் வாழ்வில்
எத்தனையோ வளர்ச்சிகள்
எத்தனையோ நன்மைகள்
எத்தனையோ மகிழ்ச்சி
அத்தனைக்கும் பின்னால்
உங்கள் உழைப்பு.
உங்கள் வாழ்வில்
எத்தனையோ பாடுகள்
எத்தனையோ கவலைகள்
எகனையோ கண்ணீர்
அத்தனைக்கும் பின்னால்
எங்கள் தேவைகள்
எங்கள் வாழ்க்கையை
வளர்பிறையாக்கத்தான்
உங்கள் தேகம்
தேய்பிறையானதா?
கண்மூடிப் பார்த்தால் உலகம்
இருளாகத்தான் தெரியும்
இது தான் நியதி - ஆனால்
உங்கள் கண்கள் மூடியதால்
எங்கள் உலகம் இருளானது
இது என்ன நீதி?
செம்பு கலந்த தங்கம்தான்
அழகிய ஆபரணமாகமுடியும்
உங்களைப்போல
அன்பு கலந்த அங்கம்தான்
அருமைத் தகப்பனாகமுடியும்
அதிசயமாக
ஓர் ஆணின் உடலில்
கருவறையைக் கண்டோம்
எங்களைச் சுமந்த
இதயத்தைத்தான் சொல்கிறோம்
உங்கள் எண்ணம்போல்
தொழில் தொடர்ந்து நடக்கிறது
குழந்தைகள் குதித்து விளையாடுகிறார்கள்
உறவினர்கள் இணைந்திருக்கிறார்கள்
ஆகாயம் கூட மழை பொழிகிறது
நீங்கள் நினைத்த எல்லாம் பலித்துவிட்டது
இந்த உறவுகளோடும், நிகழ்வுகளோடும்
நீங்கள் வாழ வேண்டுமென நாங்கள் நினைத்தோம்
அதுமட்டும் ஏனோ பலிக்கவில்லை
மகிழ்ச்சிக்காக
மனைவி, மக்களைத்
துறப்பவன்
துறவியல்ல
மனைவி, மக்களுக்காக
மகிழ்ச்சியைத்
துறப்பவனே
உண்மைத் துறவி
அந்த வகையில்- நீங்கள்
துன்பங்களை மட்டுமே தாங்கிய
தூய்மையான துறவி
அன்பை மட்டுமே அள்ளித்தந்த
அதிசயமான பிறவி
இனி எங்கள் வாழ்வில்
விடியலுண்டு பகலில்லை
விளக்குண்டு ஒளியில்லை
உணவுண்டு பசியில்லை
உழைப்புண்டு உறக்கமில்லை
மேகமுண்டு மழையில்லை
சோகமுண்டு சுகமில்லை
உண்மையைச் சொன்னால்
வாழ்வில் ஒரு பிடிப்பே இல்லை
காரணம் - நீங்கள்
எங்களோடு இல்லை
உங்கள் வியர்வைதான்
எங்கள் உயர்வை
உறுதிசெய்தது
அப்பாவும், அம்மாவும்
இருவாட்சிப் பறவைகள்போலே
இணைந்தே வாழ்ந்தீர்கள் - இனி
உங்கள் நினைவுகள் மட்டும்தான்
அம்மாவின் துணையா? - இது என்ன
வினையே விதைக்காமல்
நாங்கள் அறுத்த வினையா?
வாழும் நாட்களில்
உங்களை நினைக்கத் தவறிவிட்டோம்
நினைந்திருக்கும் இந்நாளில்
உங்களையே தவறவிட்டோம்
ஜன்னல் கம்பிகள்
சாப்பிடும் தட்டு
கடையின் பொருட்கள்
காரின் கதவுகள்
நிலைக்கண்ணாடி
தொலைகாட்சி
குலதெய்வத்தின் படம்
குழந்தையின் பூமுகம்
இதில் எதைப்பார்த்தாலும்
உங்கள் பிம்பமே தெரிகிறது
அன்பிற்கு உருவமில்லையென்று
யார் சொன்னது?
அன்பின் உருவம்
R. கணேசன்
விஷவாயுவைத் தான் உட்கொண்டு
பிராண வாயுவை உயிர்களுக்குத் தரும்
தன்னலமில்லாத மரம்போல
துயரத்தை நீங்கள் தாங்கிக்கொண்டு
உயரத்தை எங்களுக்குத் தந்த
உன்னதப் பிறவியப்பா நீங்கள்
சிறிய தலைவலிதானென்று
தெய்வங்களும், மருத்துவர்களும்
கண்டுகொள்ளாமல் கைவிட்டார்கள்
அவர்களுக்குத் தெரியுமா
உங்கள் தலைவலிதான்
எங்கள் தலைவிதியையே மாற்றியதென்று?
எங்கள் விழிகள்
கண்ணீரே காணாதிருக்க - நீங்கள்
காலமெல்லாம் உழைத்ததற்கு
எங்களால் செய்ய முடிந்தது
கண்ணீர் அஞ்சலிமட்டும்தானா?
அப்பா - நீங்கள்
உதித்ததால் துதித்தோம்
உங்கள்
உழைப்பினால் உயர்ந்தோம்
திடீரென்று
உதிர்ந்ததால் அதிர்ந்தோம்
உங்களை பற்றிய
கதைகளையே கதைத்தோம் - அந்த
நினைவுகளையே நெஞ்சில்
விதைகளாய் விதைத்தோம்
அன்று அப்பாவின் உறவோடு
ஆனந்தக் கண்ணீரில்
ஆர்ப்பரித்த விழிகள்
இன்று அப்பாவின் பிரிவில்
ஆதங்கக் கண்ணீரில்
அன்பிழந்து தவிக்கிறது
திருமணங்கள்
தீபாவளி
திருக்கார்த்திகை
பொங்கல்
புத்தாண்டு
நீங்கள் இல்லாத
இவை யாவும் -
இனி எங்களுக்கு
சந்தோஷத்திற்க்காக அல்ல
சம்பிரதாயத்திற்கு மட்டுமே
உங்கள் மௌனத்தைக்கூட
தாங்க முடியாத எங்கள் மனதிற்கு
உங்கள் மரணத்தைத் தாங்கும் சக்தியை
நீங்கள்தான் தர வேண்டும்
உலகை விட்டுப் போனதென்னவோ
உங்கள் உயிர்தான் - ஆனால்
நடைபிணமானது நாங்கள்.
உங்களை எரித்த சாம்பல்
காற்றில் கலந்திருக்கலாம்
நீங்கள் விதைத்த அன்பு
உயிரோடுதான் இருக்கிறது
எங்கள் உதிரத்தில்.
19.09.2015
இந்த நாளில்தான் - எங்கள்
இதயத்துடிப்பை
இறைவன் நிறுத்திவிட்டான்
காலப்பெட்டகத்தை
காலன் பறித்துச் சென்றான்
நெல்லையப்பர்
நேரில் வரவில்லை
காந்திமதி
காட்சி தரவில்லை
குல தெய்வங்கள்
கைவிட்டுவிட்டது - எங்கள்
குடும்ப தெய்வத்தை.
அப்பா..
கடவுள் இருந்தும்
உங்களைக் காக்க வரவில்லை
இனி - நீங்களே
கடவுளாய் இருந்து
எங்களைக் காக்க வேண்டுகிறோம்
குறிப்பு: இது எங்கள் மாமாவின் மரணம் தந்த ரணம்