ஒரு மரத்தின் மனசாட்சி

உடல் தானம் செய்த
அம்மரம் - நாற்காலியாகி
உட்கார்ந்து கொண்டது,
உயிர் மட்டும் தாவி
சொர்க்கம் சென்று
கடவுளை தேடியது !

தன் கிளைக் கைகளால்
தன்னை கிள்ளி
நடப்பை நம்பியபின்
மனக் குமுறல்களை
வாய்விட்டு கதறியது
கன்னக்காட்டு மழையோடு !

விதையாக, தழையாக,
காயாக, கனியாக
உணவாகிறேன்,
உண்டு களி(ழி)த்தபின்
மலமாகி எருவாகிறேன் !

ஆடு, மாடு, மனுச
தடை மீறி வளர்ந்தால்
வியர்வைக்கு விருந்தளிக்கும்
வெயில் தாங்கும் நிழலாகிறேன்,
அமர, அமர்த்த, சாய, படுக்க என
உயிர் தொலைந்தும்
உடல் கொண்டு
உதவித் தொலைக்கிறேன் !

தலைக்கெல்லாம் தலையாய்
மனித செல்களின் - ஒரே
உணவாம் உயிர்வளியை
வடிகட்டி வார்த்தெடுத்து
வாயிற்குமேல் வழியனுப்புகிறேன் !

இருந்தும் ஏன்
எனை இல்லாமலாக்கி
இன்புறுகின்றனர் ?
என் சாவின் சடையில்
பூக்கக் காத்திருக்கும்
மரணம் மனிதனுக்கானது !

சாலை விரிவாக்கமா ?
சாவின் விரிவாக்கமா ?
கக்கத்தில் ஆக்சிஜன்
குடுவை சுமக்கும் காலம்
வெகுதூரம் இல்லையென
எப்படிப் புரியவைப்பேன் ?

மனிதன் மனமுவந்து
நடுவது நடவாது !
பறவை எச்சங்களில் விழுந்து
பிறக்கும் - எங்களை அழிக்க
வேண்டாமென சொல்லுங்கள் !
மருந்தாகி காத்த உயிர்
மண்ணுண்டு சாவதுவோ ?

உனக்கு வேண்டுமானால்
றெக்கை தருகிறேன்
பறந்து பிழைத்துக்கொள்
என்றபடி கைவிரித்த
கடவுளை - ஒரு வெற்றுப்
புன்னகையால் அறைந்துவிட்டு
கடைசியாய் ஒரு வரம்
கேட்டது - அழுதுவிட்டார் கடவுள் !

எனைக் காக்க எனக்கே தெரியும் !
விதை வீட்டிலிருந்து
எட்டி பார்க்காமல் என்னால்
மோட்சம் பெற முடியும் !

எங்களுக்கொரு தும்பிக்கைகொடு
உன்னைப்போல் அல்லாமல்
சில்லறைக்கே ஆசிர்வதிப்பேன்
என்றாவது - எனை
வெட்டத் தயங்குவான் !

- வினோதன்

எழுதியவர் : வினோதன் (19-Oct-17, 4:44 pm)
பார்வை : 126

மேலே