நீதி வழுவா நெறியில் -- கவியரங்கம்

நீதி வழுவா நெறியில் -- கவியரங்கம்

தமிழ் வணக்கம் :-
தமிழ்மொழி சுகம்தரும் தனிநிகர் மொழியினால்
அமிழ்தமும் திகட்டும் அற்புதம் தரவே
செந்தமிழ் நிதமும் செம்மையாய்ப் பயிலச்
சிந்தையில் சிறப்பைக் காண
என்றன் நெஞ்சம் நாடுதல் தமிழே !!!!

சபை வணக்கம் :-

கவியரங்கம் கருத்தோங்க கவிஞர்கள் ஒன்றுகூடப்
புவிதனிலே புன்னகையும் பூத்திடவும் சபைதனிலே
கவிபடைக்க வந்துள்ளேன் காலத்தால் அழிவில்லாச்
செவிதனிலே இன்பமாகச் செந்தமிழும் பாய்ந்திடவே !

நீதி வழுவா நெறியில் -- தலைப்பு

நீதியின் தேவதை நிற்கின்றாள் செங்கோலாய்.
பாதி பணத்தினால் பங்கிட்டு மூடிடுவார்
ஆதியும் அந்தமும் ஆன்றோர் திருவாக்காம் .
வீதியில் மக்கள் விதந்துமே நிற்பர்.


பணத்தினால் மாறிடுதே பண்புடைய நீதி
குணத்தினால் நில்லாக் குறைகளும் சொல்ல.
கணமேனும் நன்னெறியைக் காக்க முடியா .
மணந்தருமா வாழ்க்கை மலர்ந்திடுமா சொல்வீர் .


முன்நிற்கும் கையூட்டு முத்தாய்ப்பாய் மாறிவிடும்
வன்கொலைகள் செய்திடுவார் வாடிடுமே நல்வாழ்வு
என்றென்றும் நீதியுமே ஏழைக்கே எட்டாது
மன்றினிலும் துன்பநிலை மாற்றத்திற்கோ வழியில்லை .

அச்சம் தவிர்த்தாலே ஆளுமாம் வீரமும்
இச்சகத்தில் வெற்றி இயல்பாக வந்திடும்
பச்சிளம் பாலகனும் பண்பினைப் பெற்றிட
உச்சமாய் நீதி உயர்தலும் வேண்டும் .

உழைப்பி லுறுதி உடையவரே !
உன்னத உலகை படைத்தவரே !
உழைப்பை மட்டும் நிறுத்தாமல்
ஓயா துழைத்தீர் எமக்காக ..

சொல்லால் மட்டும் நில்லாமல்
செயலில் காட்டி நின்றீரே !
நீதி நேர்மை நின்வழியே !
நிகரில்லை உமக்கே மேதினியில் !

ஆக்கம் படைத்தீர் அறிவியலில் .
அகிலம் தன்னில் முதலிடத்தை
அன்னை பாரதம் அடைந்திடவே
அப்துல் கலாமே! நீர்பிறந்தீர் .!


கனவு காணும் சமுதாயம்
நனவா யின்று மாறிடவே
அன்பு உலகை வகுத்தீரே.
அமைதி பூங்கா பாரதமே !

தெருவினிலே குழந்தையுடன் தேடுகின்றான் மானிடரை
உருக்குலையும் நெஞ்சமோடு உருவாகும் என்வரிகள்
மருவாகிப் போனதுவே மலர்ச்சியில்லை வாழ்வினிலே
கருவான மழலையுடன் காண்போமே சோகத்தை .


காண்பீரோ அவலநிலை கண்ணீரும் கவிசொல்லும்
மாண்புடைய மக்களினம் மங்கியதோ மனிதநேயம்
ஆண்டவனும் தந்திட்ட அன்பான உயிர்களெல்லாம்
தீண்டுவாரும் ஏதுமில்லை தீர்ப்புகளில் திருத்தமில்லை .


தீர்ப்புகளும் வழங்குகின்ற திறமையான நீதிமன்றம்
பார்ப்பாரோ இவர்களையும் பாரினிலே மிகக்கொடுமை
வார்ப்புகளும் கொண்டுள்ள வகையான உருவங்கள்
தேர்கொண்டு போகிறதோ தேடுகின்றார் மனிதத்தை .


தேடுகின்றேன் எதிர்காலம் தேகமுமே வாடிடவும்
பாடுகின்றேன் மௌனராகம் பலர்நோக்கப் பார்க்கின்றேன்
ஓடுகின்றேன் இவ்வுலகில் ஓய்ந்திடவும் மனமில்லை
வாடுகின்றேன் வாசமிலா வாழ்வுதனை இவ்வுலகில் .


வாழ்வினிலே சுகமில்லை வருத்தமுடன் சொல்லுகின்றேன்
ஏழ்மையாகப் பிறந்ததுவே என்குற்றம் என்பதுபோல்
கீழ்நோக்கிப் பார்க்கின்றார் கீழ்சாதி என்கின்றார்
பாழ்பட்ட என்நிலைமை பாருங்கள் மானிடரே !

பாரினிலே உள்ளவரே பாசமுடன் நோக்குங்கள்
மாரியதும் பெய்திடுமே மறக்காதீர் நீதியினை
காரியங்கள் செய்யுங்கள் கருணையுடன் கொடைப்பண்பை
ஊரினிலும் உலகினிலும் ஊன்றாக பற்றுங்கள் !!

நீதியுமே வழுவாத நிலையான சமுதாயம்
சாதிக்கும் இவ்வுலகில் சமதர்மம் உண்டாக .
பாதிப்பும் வாராது பந்தங்கள் ஒன்றுகூட .
வாதிடுவோர் அனைவர்க்கும் வந்திடுமே நல்வாழ்வு !!!

நன்றியுரை :-

நன்றி சொல்வேன் நல்வாய்ப்பு தந்தமைக்கு
வென்றேன் நீதியை வெற்றியை நோக்கியே !!
நன்றி ! வணக்கம் !



ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (25-Oct-17, 11:41 pm)
பார்வை : 108

மேலே