சிநேகிதனே -அத்தியாயம் - 13 -இறுதி அத்தியாயம்

....சிநேகிதனே....

அத்தியாயம் : 13

என் காதுகள் சரியாகத்தான் கேட்டதா...அதைக் கேட்ட விநாடியிலிருந்து அப்போது தான் என் குழந்தையை நான் பிரசவித்துக் கொண்டதாக என் உணர்வுகள் அனைத்தையும் தட்டியெழுப்பிக் கொண்டது அந்த வார்த்தை...

ஆம்..."அம்மா.."என்ற அந்த வார்த்தை...தாய்மையடைய முடியாத என்னையும் தாயாக்கியது...என் கால்கள் இரண்டையும் கட்டியணைத்துக் கொண்டிருந்தவளை கண்களில் கண்ணீர் மல்க குனிந்து பார்த்தேன்...

அந்த பிஞ்சுக் கரங்களின் அணைப்பில்தான் எவ்வளவு நேசம்...என் தாய்மையை அவள் ஓர் அணைப்பினில் மறுபிறவி எடுக்கச் செய்துவிட்டாள்...

அவள் முன்னே மண்டியிட்டு அவளை என் கைகளில் தாங்கிக் கொண்ட நான் அப்படியே என் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டேன்..அவளும் என்னை இயன்றளவு இறுக்கமாகவே பிடித்துக் கொண்டாள்...

சிறிது நேரத்தில் என் அரவணைப்பில் இருந்து விடுபட்டவள்,அந்த மழலைக் கரங்களால் என் கண்களில் வழிந்து கொண்டிருந்த கண்ணீரைத் துடைத்துவிட்டாள்...

"ஏம்மா அழுகுறீங்க...?.."

"இவ்வளவு நாளும் என்னோட செல்ல மகளை நான் பார்க்காமலேயே இருந்திட்டேனேடா...??"

"அதான்...இப்போ வந்தீட்டீங்களே மா....இனி என்னை விட்டிட்டு எங்கேயும் போக மாட்டீங்க ல...??.."

"இல்லைடா...இல்லை...இனி என்னோட ஆருக்குட்டியை விட்டு அம்மா எங்கேயும் போக மாட்டேன்..."என்றவாறே அவள் முகம் முழுதும் முத்தங்களை வாரி இறைத்த நான் என் மார்போடு சாய்த்துக் கொண்டேன்...

அவளை அணைத்தபடியே அவனை நிமிர்ந்து பார்த்தேன்...கண்ணீரைத் துடைத்தவாறே அவனும் எங்களைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்...

அவனைக் கண்களாலேயே வருடிக் கொடுத்துக் கொண்டேன்...என்னருகே வந்தமர்ந்த அவன்,எங்களிருவரையும் அவன் மார்போடு சேர்த்துக் கொண்டான்...

"அப்பாபா....நீங்க எப்போ வந்தீங்க...??.."

அவளை அப்படியே அள்ளி அணைத்துக் கொண்டவன்,

"ஆருக்குட்டிக்கு இப்போயாச்சும் இந்த அப்பா கண்ணுக்குத் தெரிஞ்சனே..அம்மாவைக் கண்டதும் அப்பாவை மறந்தாச்சு..."என்று அவன் கேலி செய்ய,அவள் "அப்பா.."என்று சிணுங்கியவாறே அவனைக் கட்டிக் கொண்டாள்...

"அப்பாவை போய் நான் மறப்பனா...நான்தான் அப்பாவோட செல்லம் ஆச்சே..."

அவள் தன் மழலை மொழியில் கண்களை அசைத்தும் கைகளை ஆட்டியும் பேசுவதைப் பார்த்த போது "என் மகள்.."என்ற கர்வம் எனக்குள் தோன்றியது...இத்தனை வருடங்களாக இந்த சின்னச் சின்னச் சந்தோசங்கள் அனைத்தையும் இழந்துவிட்டேனே என நினைக்கும் போது மனதிற்கு மிகவும் பாரமாக இருந்தது...

"அம்மா...இன்னைக்கு இரவு நீங்களும் எனக்கு கதை சொல்லுவீங்களா...??.."

"என்னோட ஆருக்குட்டிக்கு இல்லாமலா...இன்னைக்கு அம்மா குட்டிக்கு நிறைய கதை சொல்லுவேனாம்.."

"ஹைய்யா...ஜாலி....இனிமே இரவு எனக்கு அப்பாவும் நிறைய கதை சொல்லுவாங்க...அம்மாவும் நிறைய கதை சொல்லுவாங்க....நான் எல்லாக் கதையையும் கேட்டுக்கிட்டே தூங்குவேனாம்..."என்று துள்ளிக் குதித்தவள் எங்களிருவரையும் ஒரு சேர அணைத்துக் கொண்டாள்..

அப்போது வெளியில் யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்க மூவருமே திரும்பிப் பார்த்தோம்...அங்கே சரணின் அம்மாதான் நின்று கொண்டிருந்தார்கள்...

"பாட்டி...இங்க பார்த்தீங்களா...என்னோட அம்மாவை...அவங்க இனி என்கூடயேதான் இருப்பாங்க..."

"அப்படீங்களா மகாராணி.."என்றவாறே ஆதிராவைத் தூக்கிக் கொஞ்சியவர்,எங்கள் பக்கம் திரும்பி..

"நீங்க மூனு பேரும் என்னைக்கும் இப்படியே சந்தோசமா இருக்கனும்...இந்த ஒரு நாளுக்காகத்தான் என்னோட உசிரை பிடிச்சு வைச்சிட்டு இருந்தேன்.."

அவரை ஓடிச் சென்று ஒரு பக்கமாய் அணைத்துக் கொண்ட நான்,

"உங்களுக்கு எப்படி நன்றி சொல்றன்னு தெரியல மா...ஆருக்கு இன்னொரு தாயாய் இருந்து அவளை வளர்த்திருக்கீங்க...இதுக்கெல்லாம் நான் திருப்பி என்ன பண்ணப் போறனோ தெரியல..."

"இவ எனக்கும் பேர்த்தியாக்கும்...இன்னொரு தடவை நன்றி அது இதுன்னு கதைச்ச அவ்வளவுதான் சொல்லிட்டேன்..."என்று என்னைப் போலியாக மிரட்டியவர்..

"போனதெல்லாம் போனதாவே இருக்கட்டும்...அதையே யோசிச்சு மனசைக் குழப்பிக்காத...சரிம்மா நீங்க பேச வேண்டியதெல்லாத்தையும் பேசி முடிச்சதும் கீழே வாங்க...நான் இவள் கூட விளையாடிட்டு இருக்கேன்.."

"ஆருக்குட்டி விளையாடா போலாமா...??.."

"போலாம் பாட்டி...அம்மா கதைச்சு முடிச்சதும் நீங்களும் வாங்க விளையாட..."

அவளோடே செல்லத் துடித்த மனதை கஸ்டப்படுத்தி அடக்கிக் கொண்டேன்....இன்னும் அவனிடம் கேட்க வேண்டியவை சிலது மிச்சமாக இருந்தது..

"சரிடா குட்டி...அம்மா கொஞ்ச நேரத்தில ஓடி வந்திடுறேன்...ஓகேயா..??.."

"ஓகே மா..."என்றவாறே எங்களிருவருக்கும் கையசைத்துவிட்டுச் செல்பவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்...அனைவரும் என் மேல் காட்டிய அளவிட முடியாத அன்பில் என் உள்ளம் நெகிழ்ந்தது..

சிறிது நேரம் மௌனம் என்னையும் அவனையும் கடந்து செல்ல...

"சாரதா அம்மாவை உனக்கு எப்படித் தெரியும்..??.."

அவனிடமிருந்து பதில் வராமல் போகவே அவனைத் திரும்பிப் பார்த்தேன்...அவன் என்னையே கேள்வியாய் நோக்கிக் கொண்டிருந்தான்...

"நான் இங்க எப்போ வாறன் என்டதில இருந்து என்னைப்பத்தின மத்த விபரங்களைக் கூட வேற யாரும் சொல்லியிருக்கிறதுக்கான வாய்ப்பு இருக்கு...ஆனால் ஆதிராவை நீ தத்தெடுத்திருக்கிறாய்னா...என்னைப்பத்தின எல்லாத்தையும் சாரதா அம்மாவால மட்டும்தான் சொல்லியிருக்க முடியும்..."

பெரிய பெருமூச்சொன்றை வெளியேற்றிக் கொண்டவன்,

"நீ என்னை விட்டிட்டுப் போனதுக்கப்புறமும்...என்ன காரணம்னே தெரியாமல் என்னை நானே மறந்து கொஞ்ச நாள் சுத்திட்டு இருந்தேன்..."

"நாம முதன் முதல்ல சந்திச்சுக்கிட்ட நம்ம கல்லூரி மரத்தடியிலையும்...இறுதியா நாம சந்திச்சுக்கிட்ட பூங்காவிலையும்தான் என்னோட முழு நாட்களுமே கழிஞ்சிருக்கு..."

"நீ விலகிப் போனதுக்கான காரணத்தை என் மனம் தேட ஆரம்பிச்சப்பதான் நீ வளர்ந்த ஆசிரமம் என்னோட ஞாபகத்துக்கு வந்திச்சு...அங்கதான் அதை நிர்வகிச்சிட்டிருக்கிற சாரதா அம்மாவை சந்திச்சேன்..."

"முதல்ல கேட்டப்போ அவங்க உன்னைப்பத்தி எதையுமே சொல்லல..என்னோட காதலை அவங்களுக்கு புரிய வைச்சதுக்கப்புறம்தான் எல்லாமே சொன்னாங்க..."

"நீ நாலு வருசத்துக்கப்புறம் குழந்தையை தத்தெடுத்திட்டு போக வருவேன்னு அவங்க சொன்னப்போ...அப்பவே குழந்தை ஒன்னை தத்தெடுத்து வளர்க்க முடிவு செஞ்சேன்.."

"உன்னோட நண்பனா காதலனா காத்திட்டிருக்கிறத விட உன்னோட கணவனா...ஆருவோட அப்பாவா உனக்காக காத்திட்டிருக்க முடிவு செஞ்சேன்...ஆருவுக்கு அப்பான்னா நான்னு எவ்வளவு தெரியுமோ...அம்மான்னா நீதான்னும் அவளுக்குத் தெரியும்..."

"நீ ஒரு நாள் இங்க திரும்பி வருவன்னு எனக்குத் தெரியும்...அன்னையிலிருந்து அந்த ஒரு நாளுக்காகத்தான் நான் காத்திட்டிருந்தேன்...இன்னைக்குத் தான் அந்த நாள் என்னோட வாழ்க்கையில வந்திருக்கு..."

"இப்போ கூட நீ எனக்காக வரலன்னு தெரியும் மித்ரா...உன்னால முழு மனசா என்னை ஏத்துக்க முடியலைன்னாலும் என்னால உன்னை விட முடியாது மித்ரா...என் வாழ்க்கையில நீ மட்டுமேதான்..."

"உன் மனசில இருக்கிற வலிகள் முழுமையா உன்னை விட்டுப் போற வரைக்கும் நான் காத்திட்டிருப்பேன்...என்னை உடனேயே ஏத்துக்கனும்னு எந்த அவசரமுமில்லை..."என்று எங்கேயோ பார்வையை பதித்தபடி பேசிக் கொண்டிருந்தான்....மறந்தும் அவன் என் கண்களைப் பார்க்கவில்லை...

"உனக்கெல்லாம் ஒரு அறை பத்தாதுடா..."

"வந்ததில இருந்து அதை மட்டுமே கொடுத்திட்டிரு..."

"பின்ன நீ பேச்சுற பேச்சுக்கு வேற என்னத்தை கொடுப்பாங்களாம்...?.."

"நான் வேணும்னா இதுக்கு பதிலை செயலிலேயே காட்டட்டுமா மித்ரா..."

அவனின் குறும்புத்தனமான பேச்சு எனக்குள் புன்னகையை வரவழைத்தாலும் வெளியில் அவனை முறைப்பது போலவே முகத்தை வைத்துக் கொண்டேன்..

"இந்த முறைப்புக்கொன்னும் குறைச்சலில்லை..."

"காலையில இருந்து சேர் முறைச்சத விடவா நாங்க முறைச்சிட்டோம்..."

"பெரிய தியாகச் செம்மல் இவரு...நாலு வருசம் காத்திட்டிருந்தது பத்தாதுனு இன்னமும் காத்திட்டிருக்கப் போறாறாம்..."

"இதை நீ சொல்றியாக்கும்...நீயும் பெரிய தியாகி மாதிரித்தானே என்னை விட்டிட்டுப் போன..."

அவனருகே சென்ற நான் அவனது சட்டையை கொத்தாகப் பிடித்து என்னருகே இழுத்துக் கொண்டேன்...

"நான் உன்னை விட்டிட்டுப் போனப்போ உனக்காக வலியையும் வேதனையையும்தான்டா விட்டிட்டுப் போனன்...ஆனால் நீ எனக்காக காதலோட மட்டுமே காத்திட்டிருந்த..."

"ஏன்டா இவ்வளவு காதலை எனக்கு அள்ளிக் கொடுக்குற...உன்னோட காதலுக்கு நான் தகுதியானவ தானா...என்ன இப்படி கடன்காரியாக்கிட்டியேடா..."

என் முகத்தினை அவனது இரு கரங்களாலும் தாங்கிக் கொண்டவன்,

"என்னோட காதல் மொத்தத்துக்கும் சொந்தக்காரியா உன்னால மட்டும்தான்டி இருக்க முடியும்...உன்னோட காதல் மட்டுமே எனக்குப் போதும்டி..."

அவனை இன்னும் நெருக்கமாய் என்னருகே இழுத்துக் கொண்ட நான்..,

"என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியாடா...??.."

"என்னோட பொண்டாட்டிக்கு ஓகேன்னா எனக்கும் ஓகேடி.."

"அவளுக்கு டபுள் ஓகேயாம்..."

"அப்போ வாடி,இப்போவே கல்யாணம் பண்ணிக்கலாம்.."
என்றவாறே என் இடையை அவன் கரங்களால் வளைத்து அவன் பக்கமாய் இழுத்துக் கொண்டவன்...

"உண்மையிலேயே என்னை உனக்குப் பிடிச்சிருக்காடி...??.."

அவன் கேட்ட விதத்தில் எனக்கு சிரிப்புத்தான் வந்தது...அதனால் நன்றாகவே சிரித்து வைத்தேன்...

"இப்போ எதுக்குடி சிரிக்கிற...??.."

"பின்ன இவரைப் பிடிக்காமத்தான் இவரை இப்படி ஒட்டிக்கிட்டு நிக்கிறாங்களாக்கும்...?.."

"அதை உன் வாயாலதான் சொல்லேன்டி.."

"கண்டிப்பா வாயாலதான் சொல்லனுமா..??.."என்று புருவத்தை உயர்த்திக் கேட்ட என் விழிகளில் குறும்பு எட்டிப் பார்த்தது...

"ஆமா...ஆமா..."என்று தலையை மேலும் கீழுமாய் ஆட்டிய அவனிடத்திலும் மர்மப் புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது..

அதற்குமேலும் அவனை ஏங்கவிடாது,அவன் முகத்தோடு என் முகத்தை உரசிக் கொண்ட நான் அவனிடம் முழுமையாக என்னைத் தோற்று என் காதலின் வெற்றி முத்திரையை அவன் இதழ்களில் எழுதத் தொடங்கினேன்...

விழுகையில் தோள் கொடுத்து
என் தோழனானாய்...
எழுகையில் உன் கரம் தந்து
காதலனானாய்...
இன்று முழுமையாய் உன்னில்
விழுந்துவிட்டேன்..
காலம் முழுதும் உன்
அணைப்பினிலேயே என்னை
சிறைப்பிடித்துக் கொள்வாயா...?


இனி எல்லாம் வசந்தமே....

எழுதியவர் : அன்புடன் சகி (29-Oct-17, 3:12 pm)
பார்வை : 638

மேலே