பிறந்தநாள் வேண்டுதல்
வாழ்த்துக்கள் சூழ்கின்ற வாழ்க்கை வேண்டும் ! சக்தி
வாழ்கின்ற நெஞ்சு வேண்டும் !
வாசத்தில் குன்றாத செந்தமிழ்ப் பூ நெஞ்சில்
வந்து பூத்தாட வேண்டும் !
வீழ்கின்ற வேளையில் வந்தென்னைத் தாங்கிடும்
வீரரின் உறவு வேண்டும் !
வீணாக ஒருநாளும் கழியாது பொழுதெலாம்
வித்தகம் செய்ய வேண்டும் !
நீள்கின்ற நாட்களின் நெளிவிலே மூழ்காமல்
நீந்திடும் கல்வி வேண்டும் !
நினைவெலாம் நிறைவெலாம் எந்நாளும் வையத்தின்
நீடுபுகழ் பாட வேண்டும் !
ஆள்கின்ற தெய்வத்தின் அருளாசியாய்க் கவிதை
அகத்திலே கொட்ட வேண்டும் !
அன்பர்க்கும் வம்பர்க்கும் நல்லதே எண்ணிடும்
அற்புதச் சிந்தை வேண்டும் !!
கண்ணிலே காந்தியும் நெஞ்சிலே வீரமும்
கருத்திலே நேர்மை அருளும் !
கவிதையில் விடுதலை கண்டிடும் எண்ணமும்
காழ்ப்பிலா மனமும் வேண்டும் !
விண்ணையும் மண்ணையும் காத்திடும் மாகாளி
வீரை நின் பாதம் வேண்டி
வித்தக இளங்கவி கேட்கிறேன் நின்மடி
வீற்றிடச் செய்வை நீயே !!!
-விவேக்பாரதி
22.10.2017