சொல் வரை
வந்துவீழும் சொற்களுக்கு வரையமைக்க முடியுமா ? - அவள்
வாழ்த்துத்தரும் பாடலுக்கு மறுப்புச்சொல்ல இயலுமா ?
சந்தநயம் துள்ளும்நடை கவிதைவந்து கொட்டவே - அதைச்
சற்றுநேரம் கழித்துவரச் சொல்லுவதும் நியாயமா ?
மூக்குவழி சுவாசங்கள் வந்துவந்து சென்றிடும் - அம்
முயற்சியோடு என்கவிதை நிலையைவைத்துப் பார்த்திடில்
வீச்சில்கூட மூச்சுபோல வீரமாக பாயுமே - அது
விளையாடித் தலையாட்டி விந்தைபல ஆக்குமே !
எந்தநேரம் கவிதைவரும் சொல்லுபவர் எங்குளார் ? - அதன்
ஏக்கமென்ன நோக்கமென்ன கண்டவர்கள் எங்குளார்
வந்துபோகும் மின்னல்கீற்றை வகைப்படுத்த முடியுமா - மனம்
வார்த்தைமழை சிந்துகையில் கோத்திடாமல் விடியுமா ?,
யார்கொடுக்கும் விந்தை பாட்டு ? யாருக்கேனும் தெரியுமா ? - அதை
யாண்டும்வந் துயிர்ப்பதென்ன எவரும்சொல்ல முடியுமா ?
போர்கொடுக்கும் புயல்கொடுக்கும் புரள வைக்கும் பாடலே - வெளி
போந்துவிட்டால் பேறுகண்ட சுகம்கொடுக்கும் பாடலே !!
வாயெடுத்துப் பாடப்பாட வந்தசேரும் பாடலே - பிறர்
வாழ்த்தெடுத்து ணர்ந்துநோக்க வாழ்க்கையாகும் வாழ்க்கையே !
தாயெடுத்து நல்கும்பாடல் சேயெடுத்துப் பாடுவோம் ! - செந்
தமிழெடுத்துச் சுவையெடுத்துக் கவியெடுத்து பாடுவோம் !!
-விவேக்பாரதி
24.07.2017