நூற்றாண்டு நாயகர் எம்ஜிஆர் - தமிழுக்கு செய்தவர்

ஈரோடு தமிழ்ச்சங்கப் பேரவையின் கவியரங்கத்தில் பாடியது.

தமிழ் வணக்கம் :

முதல்மாந்தன் நாவிலே முத்தாய்ப் பிறந்தவள் !
முத்தாய்ப்பும் ஆகின்றவள் !
நிதம்நூறு பாஷைகள் வந்தாலும் வீழ்ந்தாலும்
நிற்கின்ற உயரோசையள் !
விதவிதப் பாசொல்லும் வித்தகர் நெஞ்சிலே
வீற்றர சாளும்தமிழின்
பதம்பற்றி இச்சிறுவன் பாசெய்ய வந்தனன்
பைந்தமிழ் என்னைக் காக்க !!

அவை வணக்கம் & அடக்கம்

தன்னே ரில்லாத் தமிழைக் கவிதையைப்
பொன்னாகப் போற்றிப் பொலிவோடு பாடுகின்ற
காரோட்டும் வானம் கமழ்கின்ற செந்தமிழ
ஈரோட்டுப் பாமன்றை இவ்வுலகு வாழ்த்தட்டும் !
சொல்லை எடுத்ததனைச் சொக்கும் கவியாக்க
வல்ல கவிஞர் வரிசையிலே இத்தளிரும்
சொல்லும் கவிதை சுகபோகம் தந்திடவே
எல்லாரும் கேட்டுவக்க என்னிறைவி செய்யட்டும் !
நூற்றாண்டு நாயகரை நூதனமாய்ப் பாவழியே
போற்றிவிட வந்தவர்காள் பொன்னான நல்லியற்காய்
கூட்டமெனக் கூடிக் குவிந்திருக்கும் முன்னோரே !
ஈட்டும் வணக்கம் இதைமுதலில் ஏற்றந்தப்
பொன்மனச் செம்மல் பொதிகைத் தமிழ்வாழ
அன்போடு செய்தவற்றை ஆவலொடு நானடுக்க
என்கவி கேட்டே எழுப்பும் கரவொலியால்
சின்னவனை வாழ்த்தின் சிலிர்ப்பு !!

நூற்றாண்டு நாயகர் எம்ஜிஆர் - தமிழுக்குச் செய்தவர்

அன்றொரு நாளந்தக் கூடத்திலே - அவன்
ஆனந்த ராகம் இசைத்துநின்றான் !
சென்றவன் காதலி "செல்வந்தனே - என்ன
சேதி?" யென்றே சென்று கேட்கவந்தாள் !
"கன்னலை யொத்த தமிழெனும்தாய் - புகழ்
காத்திடச் செய்தவர் பட்டியலில்
மன்னவர் எம்ஜிஆர் செய்திருக்கும் - பெரும்
மாண்பு படித்து மயங்கிவிட்டேன்"

என்றனன் அங்குடன் காதலிதான் - எனக்
கெடுத்தக் கவிதையைக் காட்டுமென்றாள்
சென்றவன் காகிதக் கத்தையொன்றை - வலு
சேரும் கரத்தினில் ஏந்திவந்தான் !
"நின்றதைப் பாடுக" என்றதுமே - அவன்
நீட்டிக் கவிதையை ஆரம்பித்தான் !
மன்றமென் றானது கூடமுமே - இம்
மக்களென் றாயினள் மங்கையுந்தான் !!

(வேறு)

நெல்விளையும் தஞ்சையெனும் வளநாட்டில் தமிழ்செழிக்கும்
நெறியைக் கொண்டு
தொல்பெருமை பலகலையின் கழகத்தை நிறுவியவர்,
தொணிக்கும் பாட்டில்
வல்லவனாம் கண்ணனவன் தாசனுக்கும் அரசுகவி
வனப்பைத் தந்த
நல்லவுளம் ! கோராம சந்த்ரனெனும் செந்தமிழக்
கோமான் வாழ்க !!

பிளவுபடும் தமிழினத்தைத் தான்நடித்த படங்களிலே
பின்னே தோன்றி
உளங்கவரும் தமிழ்ப்பாட்டு வழியாக சேர்த்திட்ட
உயர்ந்த நெஞ்சம் !
அளப்பரிய மரியாதை வாழவைத்த தமிழ்நிலம்மேல்
அமைத்த பண்பர் !
சளைப்பில்லா உழைப்பாளி எம்ஜிஆர் புகழிந்த
ஜகத்தில் வாழ்க !!

வீறுமிகும் தமிழீழச் சோதரரின் வேள்விக்காய்
விரித்த கையால்
கூறும்விதம் பல்லுதவி செல்வமெலாம் அவர்கேட்கக்
கொடுத்தும் அன்னார்
ஆறுதலை அடையவவர் அருகிருந்தும் தமிழினத்தை
அணித்துக் காத்த
பேறுடைய அண்ணாவின் நல்லிதயக் கனியவரின்
பெற்றி வாழ்க !

தமதனுப வத்தையெலாம் ஆனந்த விகடனிலே
தந்த பாங்கும் !
அமைத்தபெருங் காவியமாம் நாடோடி மன்னனையோர்
அரிய நூலாய்க்
கமழ்ந்திடவே வைத்ததுவும் ! திரையினிலே மேலுமிரு
காவி யங்கள்
சமைத்ததுவும் ! நூற்றாண்டு நாயகர்தான் செய்தளித்த
தமிழ்த்தொண் டாகும் !!

இத்தகையர் ஆண்டபெரும் நாடுதனை பொய்யரக்கர்
இழிவில் தள்ளி
செத்தையென ஆக்குதலும் சரியாமோ ? இவராணை
சேர்ந்து விட்டால்
அத்தனையும் மாறாதோ ? நம்வீட்டுப் பிள்ளையென்றும்
அவரே உள்ளார் !
வித்துக்கே வித்தாகும் விருட்சமெனும் அன்னாரை
வாழ்த்தல் நன்றே !!!

(வேறு)

என்ற கவிதையை வாசித்ததும் - அவள்
எழுந்தடடா வெனக் கைதட்டினாள் !
நின்றவன் கண்ணைத் திறக்கையிலே - முன்னர்
நீண்ட ஒலியின் பெருக்கிகண்டான் !
என்னைத்தான் சொல்கிறேன் நிற்பவன்நான் - இவை
என்கனா பாடிய கவியெனினும்
மன்ற மகிழ்ச்சியும் கைதட்டலும் - அந்த
மங்கையைக் காட்டிடில் இன்பமன்றோ !!

-விவேக்பாரதி
29.10.2017

எழுதியவர் : விவேக்பாரதி (31-Oct-17, 12:57 pm)
பார்வை : 85

மேலே