வாடிய மலர் மலர்ந்தது

நான் கோயிலுக்குப் போவதைத் தவிர்ப்பவன், ஆனால் நாத்திகன் இல்லை. இறைவன் எமக்குள் இருக்கும் போது அங்கு ஏன் அவரைத் தேடிப்போவான் என்பது என்கருத்து. சற்று முற்போக்கு தன்மை தான். சிலருக்கு அந்த கருத்து பிடிக்காது. என் கருத்துக்கு என் மனைவி எதிர்மாறானவள். சற்று பழமையில் ஊறியவள். வெள்ளிக்கழமையில் வீட்டில் மரக்கறி உணவு. அவள் பிடிக்காத விரதங்கள் இல்லை. பல காலம் தான் சுமங்கலியாக வாழவேண்டும் என்பதற்காக. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோயிலுக்கு நானும் அவளோடு போயாக வேண்டும் என்பது அவளது நியதி.

அன்று கோயிலுக்கு நான் போன போது ஒரு உருக்கமான காட்சி. ஒரு பெண். அதுவும் வெள்ளை நிறச் சேலை அணிந்த தோற்றம். கைக்குழந்தையோடு தெய்வத்தின் சன்னிதியில் கண்களில் நீர் வழிய உருக்கமாகத் தேவாரம் பாடிக்கொண்டிருந்தாள். அவளுக்கு வயது சுமார் இருபததைந்துக்கும் முப்பதுக்கும்; இடையில் இருக்கலாம் என்பது என் மதிப்பு இந்த இளம் வயதில் அவள் வெள்ளை சேலை அணிய வேண்டுமா? நான் அவள் மேல் பரிதாபப் பட்டேன். அவள் குரலும் கண்ணீரும் என்னை சற்று கவர்ந்தது. அவள் நெற்றியில் குங்குமத்தைக் காணோம். கழுத்தில தாலியில்லை. நகைகள் இல்லை. வெள்ளை நிறச் சேலை அவள் அழகை மெருகுபடுத்தியது. ஒரு கேரளப் பெண்போல தோற்றமளித்தாள்.. நீண்ட தலைமயிர் ஆனால் அவள் கூந்தலில் மலர்கள் இல்லை. கைகளில் வலையல்கள் கூடக் கிடையாது. சுற்றியிருப்பவர்களைக் கூட அவள் கவனிக்கவில்லை. தன் சோகக்கதையை இறைவனிடம் பாடல் மூலம் முறைப்பட்டதாக எனக்கு தெரிந்தது. அவள் கண்களில் கண்ணிர் வழிந்தது. அக்காட்சி சினிமாவில் வரும் காட்;சியைப் போல் இருந்தது எனக்கு. நல்
ல வேளை என் மனைவி கோவலை சுற்றி வர போய் விட்டாள்

அவள் கணவனை பிரிந்து அழுகிறாளோ என்று சிந்தித்தேன்? அந்த வயதில் அவளது கோலத்தைப் பார்த்ததும் இந்த வயதில் கணவனின் பிரிவை அவளால் தாங்கமுடியவில்லை என்பது தெரிந்தது.; அவள் நீண்ட கால தாம்பத்திய வாழ்க்கையை அனுபவித்தவள் போல் என் மனதுக்குக்குப் படவில்லை. அதுவும் அந்த குறைந்த வயதில் விதவை தோற்றம் என்றால் தன் விதியை நொந்ததினால் தோன்றிய அழுகையா?
அருச்சனை செய்து ஐயர் கொண்டு வந்த தட்டில், இருபது டாலர் நோட்டை போட்டு விட்டு கையில் இருந்த ஒரு வயதுக் குழந்தையை கீழே இறக்கினாள். குழந்தை தாயின் சேலையை பிடித்துக்கொண்டு விரலை சுப்பியபடி நின்றது. இனத்தவர்கள் அவளோடு உதவிக்கு வந்திருந்ததாக எனக்குத் தெரியவில்லை. அவளுடைய சோகத்தில் பங்குகொள்ள அவர்களுக்கு விருப்பமில்லை போலும். ஐயருக்கோ அவள் தட்டில் காணிக்கையாக போட்ட பணம் அவர் மனதில் திருப்தியைக் கொடுத்தது. கடவுள் மேல் வைத்த நம்பிக்கையை வெளிப்படுத்த ஐயருக்கு அவள் கொடுத்து காணிக்கை அது.

அவள் வாய்விட்டுக் கதறி, “தாயே அவர் ஏன் இந்த குழந்தையை என்னோடு தனிய தவிக்க விட்டு போய் விட்டார்? என்னையும் தனோடு கூடிப் போயிருக்கலாமே. நான் எப்படி இவனை வளர்க்கப் போகிறேன். நான் தனித்துப்போனேன். சொந்தக்காரர்களும் ஒதுங்கி வாழ்கிறார்கள். நீ தான் எனக்கு வழிகாட்ட வேண்டும்” ஒப்பாரி வைத்து அழுதாள். அங்கு நின்ற பலருக்கு அவளது அழுகையைக் அவர்கள் கணகளிலிலும் கண்ணீர்; வரும்போல இருந்தது . எல்லோரது பார்வைகளும் அவளை நோக்கிச் சென்றன.

“ ஐயோ பாவம் இந்த வயதில் விதவையாகவேண்டுமா?. தாலி பாக்கியம் இல்லை போலும் என்று எனக்கு பக்கத்தில் நின்றவர் முணுமுணத்தது என் காதில் விழுந்தது

ஐயர் அருச்சனைத் தட்டோடு திரும்பி வந்தார்.

“பிள்ளை நீ அழுவதால் போன உன் கணவர் திரும்பவும் வரப்போவதில்லை. மனதை தேற்றிக் கொள். வாழக்கையில் விரக்தியடையாதே. உன்னைப்போல் எத்தனையோ பெண்கள் சிறுவயதில் கணவனை இழந்து திரும்பவும் புது வாழ்வு ஆரம்பித்திருக்கிறார்கள். இதோ திரு நீறு, இதை பூசு. உனது கவலைகள் எல்லாம் போய்விடும் . மனதை தேற்றிக்கொள” ஐயர் பேச்சில் இருந்து அவளை ஏற்கனவே அவருக்கு நன்கு தெரியும் போல எனக்குத் தோன்றிற்று.

“இதற்கு முன்னர் உவள் சுமங்கலியாக பல தடவை கணவனோடு கோயிலுக்கு வந்திருக்கிறாள். நான் கோயிலுக்கு வருகிற சமயம் இவளைக் கண்டிருக்கிறன்”, குரல் கேட்டு திரும்பிப்பார்த்தேன். என் நண்பன் மோகனின் குரல் அது. மோகன் அடிக்கடி கோயிலுககு வருபவன். ஒரு வேலை கோயிலில் பலரை சந்திக்கவும், தரிசனத்துக்கு வரும் இளம் பெண்களை பார்க்கவும், காரணமாக இருக்கலாம். அவனும் அந்தப் பெண்ணை அவதானித்திருக்கிறான். மோகனுக்கு இன்னும் திருமணமாகவில்லை.
“அப்படியா? உனக்கு அவளை முன்பே தெரியுமா மோகன்”?, நான் அவனைக் கேட்டேன்.
;
“இப்படி விதவைக் கோலத்தில் கோயிலுக்கு வந்து அழுது கண்ணீர் வடிப்பதை இப்போது தான் நானும் முதல் தடவையாகப் பார்க்கிறேன். ஆறு மாதங்களுக்கு முன்னர் ஒட்டாவுக்கு போகும் வழியில் இவளது கணவன் சுகுமார் கார்விபத்தொன்றில் இறந்தவன். வங்கியில் சீனியர் மனேஜராக இருந்தவன். ரிச்மெண்ட் ஹில்லில் ஒரு பெரிய தனி வீடு அழகன். நல்ல காலம் குடும்பமாக அவன் காரில் போகவில்லை” என்றான் மோகன் . அவள் விதவையாகையால் அவள் கையில் குங்குமத்தையும் பூவையும் கொடுப்பதை ஐயர் தவிர்த்தார்.

திருமணமாகி மூன்று வருடங்களில் விபத்தில் இறந்து போன கணவன் அவளுக்கு நல்லதைச் செய்து விட்டே போனான். நான்கு வருடங்களுக்கு முன்னர் 5 இலட்சம் டொலர்களுக்கு விபத்துக்கான காப்புறுதி ஒன்றையும் எடுத்து வைத்திருந்தான். காரணம் தனது ஜாதகத்தில் அவனுக்கு தீடீர் மரணம் எற்படும் என்று இருந்ததாம். காப்புறுதி கொடுத்த கொம்பெனிக்கு அவனுடைய சாதகம் தெரியாது போல். மனைவிக்கும் அதை அவன் சொல்லவில்லை. தனது மணவாழ்க்கை நீண்ட வாழ்க்கை இல்லை என்பதை அவன் ஏற்கனெவே அறிந்து வைத்திருந்திருக்கிறான். அதனால் தான் அடிக்கடி மனைவியோடு கோயிலுக்கு வந்தானோ என்னவோ”. இது மோகனின் விமர்சனம்.

“ இது எல்லாம் உனக்கு எப்படி தெரியும் மோகன் ;”? நான் அவனைக் கேட்டேன்.

“இந்த விபரம் இறந்தவனுடைய நண்பன் எனக்குச் சொன்னது” என்றான் மோகன்.

தெரிந்தவர் ஒருவர் கார் விபத்தில் இறந்தால் இறந்தவன் இன்சியூரன்ஸ் எடுத்தவனா என்ற கேள்வி பலர் மனதில் தோன்றுவது சகஜம்.
“உயிருக்கான பாதுகாப்புக்காக அறுநூறரயிரம் டொலர்கள் மதிப்புள்ள வீட்டின் மீதும் தன்; பேரில் காப்புறுதி எடுத்திருந்தான். அந்த வீடும் இப்போ அவளுக்குத்தான் சொந்தம்”;. இதை எனக்கு சொன்னது சுகுமாருடன் ஒரே வங்கியில் வேலை செய்த மோகனுக்கு அருகே நின்ற அவனின் நண்பன் ஒருவன்,.
விதவைக்கு கிடைத்த சொத்து பற்றி எத்தனையோ விமர்சனங்கள். பொறாமைகள். சிலரின் மறைவு சில சமயம் சிலருக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் இது ஒருவரின் விமர்சனம் . இன்னும் சிலர் குடும்பத்தை விட்டு போகும் போது கடன்களை வைத்துவிட்டு போவார்கள்.
மோகன் அவள் மேல் அனுதாபப் படுவதைக் கண்டு நான் அவனிடம் கேட்டேன்.
“ மோகன் உனக்கு இன்னும் திருமணமாகவில்லை. உன் வயதோ நாற்றபத்தையிந்னதை தாண்டி விட்டது. இவளை நீ திருமணம் செய்ய விருப்பமா சொல்லு . விருப்பம் என்றால்; ஐயர் எனக்கு தெரிந்தவர் அவர் மூலம் அந்த பெண்ணுக்கு மறு திருமணம் செய்ய விருப்பமா என்று அவளை கேட்கச் சொல்லுகிறேன். நீ என்ன சொல்லுகிராய் ”

“ என்ன விசர் கதை பேசுராய் சந்திரன். நீ முற்போக்குவாதியாய் இருக்கலாம். நான் அப்படி இல்லை. புழு குத்திய மாம்பழத்தை யார் இனி சாப்பிடுவார்கள்”

“ பல காலம் சென்ற அழுகிய ; மாம்பழத்தையும் விரும்பமாட்டார்கள் “என்றேன் நான் . அவனுக்கு என் பதில் பிடிக்கவில்லை முகத்தை திருபிக்கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்

கணவனின் மரணத்துக்கு பின்னர் அவள் ஒரு திடீர் பணக்காரி. பணம் மட்டும் இருந்;தால் என்ன. இழந்த கணவனையும், அவன் மேல் அவள் வைத்திருந்த அன்பையும்; திரும்பவும் பெற முடியுமா?. அதுவும் அவள் அவனை 3 வருடங்கள் ஓடி ஓடி காதலித்து திருமணம் செய்தவளாம். தன் வாரிசாக ஆசைக்கு ஒரு ஆண் குழந்தையை கொடுத்துவிட்டு அவன் போய்விட்டான்.

******

கோயிலுக்கு வெளியே நான் வந்த போது ஈழப் போரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் பணம் சேர்க்க உண்டியல் குழுக்கிக் கொண்டிருந்தார்கள் நல்ல மனம் கொண்ட சிலர். அவர்களின் வேண்டு கோளை கேட்டும் கேளாதவாறு அந்தப் பெண் ஒரு சிறு தொகையையாவது உண்டியலில போடாமல் போய்விட்டாள். ஒரு வேலை அவளது சிந்தனை வேறு எங்கையோ பொய்விட்டதோ தெரியாது . போரில் இறந்தவர்களைவிட அவளது கணவன் மறைவு தான் அவளைப் பாதித்திருந்தது. தனது கணவனின் மறைவை நினைத்து ஐயருக்கு இருபது டொலர் அருச்சனைக்காக கொடுத்த அவள், போரில் உயிர் நீத்த எத்தனையோ குழந்தைகள் , பெண்கள், ஆண்கள் விதவைகள் ஆகியோரை நினைத்து ஒரு டொலாரவது போட்டிருந்தால் அது அவளது மதிப்பை கூட்டியிருக்கும். அவளது சுயநலம்தான் அங்கு ஓங்கி நின்றதை என்னால் காணமுடிந்தது. கடவுளிடம் அவள் வேண்டியது தன் கணவனின் மறைவிற்கு பின்னர் பாதுகாப்பு. அதுக்கு தேவையான பணமும வீடும்; கிடைத்துவிட்டது. அதே சமயம் மரணம் என்பது எவருக்கும் எந்த நேரத்திலும் குடும்பத்தில் வரலாம். அதை சவாலாக ஏற்று வாழத் தெரியவேண்டும் என்பது அவளுக்குப் புரியவில்லை. யார் கண்டது. கணவன் மேல் உள்ள பக்தியும் அன்பையும் விட, கடவுள் மேல் உள்ள நம்பிக்கையும் பக்தியும் அவளுக்கு முக்கியமாக இருந்திருக்கலாம்.. அவள் மறு திருமணம் செய்வாளா என்பது எனக்குச் சந்தேகம்

*******
சுமார் ஒரு வருடத்துக்குப் பின் நான் அந்தப் பெண்ணை திரும்பவும் ஒரு நாள் அதே கோவிலில் சந்திப்பேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்த முறை நான் கண்ட காட்சி முற்றிலும் வேறுபட்டது. அவள் நெற்றியில் குங்குமம், விலையுயர்ந்த பச்சை நிறக் காஞ்சிபுரச் சேலை அணிந்திருந்தாள். தலையில் பூவும் . கழுத்தில் நகைகளோடு அவள் காட்சி அளித்தது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.

“என்ன திரும்பவும் திருமணம் செய்துவிட்டாளா? அப்படியானால் அது நல்ல முடிவு” என்று நான் சிந்தித்த போது அவள் அருகே, ஒரு கனேடிய வெள்ளையினத்தவன் வேட்டியோடு நிற்பதைக் கண்டேன். அவளது குழந்தையைக் கையில் பிடித்துக் கொண்டு அவன நின்றான். அவன் தான் அவளது கணவன் போலும். காலம் மாறிவிட்டது.

விதவைக் கல்யாணத்தை ஆதரிப்பவன் நான். காலம் சென்ற ஈழத்து எழுத்தாளன் தளையசிங்கம் 1962 இல் எழுதி 1984இல் வெளிவந்த தனிவீடு நாவல் தான் எனக்கு அப்போது நினைவுக்கு வந்தது.. ஒரே இனத்தவன் விதவையை திருமணம் செய்ய விரும்பாத போது, வேறு கலாச்சாரத்தை பின் பற்றும் ஒருவன் விதவைத் திருமணத்தை ஆதரிக்கிறானா என்ற கேள்வி என் மனதில் தோன்றியது.

யாவும் கற்பனை

எழுதியவர் : (பொன் குலேந்திரன் - கனடா) (1-Nov-17, 5:57 am)
பார்வை : 397

மேலே