தனிமையிலே இனிமை
என்னை எனக்கே
வாசித்து காட்டும்
ஆசானாகிப்போகிறது
என் தனிமை....
என் மெளனத்தை உறிஞ்சி
ஊமையின் பொழுதுகளாய்
பிரிவதும் தொடர்வதுமாய்
என் தனிமை.....
என் பகிர இயலா
இரகசியங்களை
நினைவூட்டிப் பகிரும்
ஆத்மார்த்த தோழனாய்
என் தனிமை.....
என் ஆழ்மனப் பரப்பில்
தன்னை ஆசுவாசப்படுத்தி
செல்லும் சலனமில்லா
அலைகளாய்
என் தனிமை.....
என் கட்டுக்கடங்கா
கவலைகளை
அசை போட்டு அமர
ஓர் தின்ணையாய்
என் தனிமை......
என் ஆசை அலைகள்
கிறுக்கி வைத்த
இதய சுவர்களை
படித்து படித்து
சுகம் சேர்க்கும் தருணங்களாய்
என் தனிமை .......
வேரறுக்காது மிஞ்சிய
தோல்விப்பயிர் சாய்ந்து
நம்பிக்கை துளிர்விட
பருவந்தவறியும் பொய்க்காத
சிறு மேக ஊர்வலமாய்
என் தனிமை....
.