சீதனம் வேண்டாம்

கட்டுமரத் தேகம்
கறுகறுத்த முடி
முறுக்கி விட்ட மீசை
முனுமுணுத்தபடி எம்.ஜி.ஆர் பாட்டு
பனையடி உயரம்
பாயுற சிங்கம்
மதயானைக் கோவம் வரும்
மடார் எண்டுதான் சொல்லுவாங்கள்
பொட்டச்சியள் எல்லாம்
வட்டமடிச்சு திரிவாளள்..

எங்க கண்டாரோ ??
என்னதான் பிடிச்சுதோ !
சத்தியமா தெரியாது
விடிய காலமை - அட
விடிய கூட இல்லை

படலையை திறந்து கொண்டு
படார் எண்டு உள்ள வந்தார்
அப்பனை கூப்பிட்டார்
அசராமல் கேட்டார்

சீதனம் வேண்டாம்
சீலையோட அனுப்பு
கட்டித்தா-இல்ல
கடத்திப் போவன்

கண்ணே வெட்டல நான்
கவித்திட்டு_போய்ட்டார்..

அப்பன் குதிக்க
ஆத்தை தடுக்க
கலியாண பேச்சு
களைகட்டத் தொடங்கிச்சு

ஒருநாள்
அப்பனும் அஞ்சாறு பேரும்
முத்தத்தில கூப்பிட்டு
முடிவு கேட்டிச்சினம்
வெக்கப்பட்டு
வீட்டுக்க ஓடிட்டன்

ஊரெல்லாம் பேச்சு
உவனுக்கோ குடுக்கப்போறாய்
உதவாத ஆம்பிளை
உனக்கென்ன விசரே ?

அப்பர் தயங்கினார்
ஆத்தை பயந்தா...
நெஞ்செல்லாம் அவர் நினைப்பு
அஞ்சாறு நாளிருக்கும்
கவித்திட்டு போனவர்
கடத்திட்டு போனார்..

எப்பிடி போனன் எண்டு
எனக்கே தெரியல
முதல்நாள் பாத்ததிலயே
முழுசா விழுந்திட்டன்..

அப்பா ஏற்கேல்ல
அவரும் விடல
அப்பிடி வாழ வச்சார்- என்
ஆம்பிளைச் சிங்கம்..

இந்த கதிரைதான்
இப்பிடிதான் நானிருப்பன்
பொக்கை வாய்க்கு
பொயிலை குடுத்திட்டு
பொழுது போக
புதினம் கதைப்பம்...

அஞ்சாறு வருசமிருக்கும்
நெஞ்சை பிடிச்சுக்கொண்டு
நிமிந்து படுத்திட்டான் - என்
கட்டுமரத்தேகத்தான்...

கவலையில்லை
கண்டிடுவன் கொஞ்சநாள்ல.

கவிப் புயல்
சஜா வவுனியா

எழுதியவர் : சஜா (11-Nov-17, 10:01 pm)
சேர்த்தது : சஜா
Tanglish : sithanam ventaam
பார்வை : 162

மேலே