வணக்கம் அம்மா

ஆசிரியர் பயிற்சி முடித்த
என் உள்ளத்திற்கோ...
இல்லத்தில் உறங்க எண்ணமில்லை...
வேலை தேட விரைந்தேன்...
எனதிரு கால்களும்,
பள்ளிகளை நோக்கி படையெடுத்தது – நான்
படித்த பள்ளியின் வாயில்,
எனக்காக திறந்திருப்பதாக எண்ணம்...
சுட்டித்தனம் செய்து நான்
சுற்றித்திரிந்த இடங்களை,
பார்த்துக்கொண்டே கடந்து சென்றேன்...
பல புது முகங்களுக்கு மத்தியில்,
பழகிய பழைய முகங்கள் – என்னை
நோக்கி மெதுவாய் புன்னகைத்து...
என்ன காரணம வந்தாயோ – என்ற
அவர்களின் கேள்விக்கு இதழ்களின்
குரலில் மெதுவாய் பதிலளித்தேன்...
“வேலை வாய்ப்புத் தேடி.”
ஏற்றிவிட்ட ஏணிகளின் ஒத்துழைப்பில்
வேலையும் கிடைத்தது...
பள்ளியும் புதிதல்ல...
வகுப்பறையும் புதிதல்ல...
முப்பது மாணவர்களின்,
எதிர்நோக்கில் என்னுடைய நுழைவு...
மொத்தமாய் எழுந்து நின்ற மாணவர்களின்,
ஒருமித்த குரல் ஒலித்தது...
“வணக்கம் அம்மா” என்று
பழக்க தோசத்தில் எந்தன் தலையும்,
திரும்பி தேடிப்பார்த்தது,
எந்தன் ஆசிரியரின் வருகையை...
பின்புதான் மூளைக்கு உணர்ந்தது – இன்று
நானும் ஒரு ஆசிரியர் என்பதை...
உள்ளத்தில் புன்னகைத்து,
தொடர்ந்தேன் எனது பணியை...!!
Written by JERRY