உயிரை கரையேற்றும் வரை
தேகத்தின் சுருக்கத்தில்,
முதுமையின் முதிர்ச்சி...
வெள்ளை முடியும்,
தலையை குத்தகைக்கு எடுத்திருக்கிறது...
உடலில் இருக்கும் உயிர்,
கண்களில் ஏனோ குறைந்துவிட்டது...
தெம்பில்லாமல் நடக்கும்
துவண்டு போன கால்கள்,
நடுக்கத்தோடு உடலில் ஒட்டியிருக்கும்....
கைகளில் சில்லறை இரண்டு ரூபாய்.
கடையில் நிற்கும் மூதாடிக்கு,
கிடைத்தது ஒரு ரூபாய் தேயிலை...
மீதமுள்ள ஒரு ரூபாய்க்கு,
மீந்துபோன தூசு நிறைந்த சர்க்கரை...
இரண்டு ரூபாய் கலவையில்,
காலை பசியாற்றியது மூதாட்டியின் வயிறு...
பிள்ளைகளையெல்லாம் கரையேற்றி,
கடமைகளை முடித்துவிட்டாலும்,
உயிரை கரையேற்றும் வரை,
நாட்கள் நகர்த்த போராடுகிறது...
ஆதரவற்றவர்களுக்கு அரசின் கரம்,
நேரடியாக நீளுமா தெரியவில்லை...!
மூதாட்டிக்கு நேரடியாக கிடைத்தது...
மீதமுள்ள சத்துணவை வாரம்
ஐந்து நாட்கள் கொடுத்துவிட்டு,
இரண்டு நாட்கள் விடுமுறை...
அருகில் உள்ளவர்களின் இறக்கத்தில்,
இரண்டு நாட்கள் நகர்கிறது...!
கண்களில் கண்ணீரோடு மூதாட்டியை
தொடர்வதை விட்டுவிட்டு விரைந்தேன்...
வீட்டை அடைந்ததும் அலைபேசியில்,
அன்னையை அழைத்து ஆதரவாய்,
“அம்மா சாப்பிட்டாயா... உடம்பு எப்படியிருக்கு...
வேண்டுமென்பதை மறைக்காமல் கேள்...”
என்ற இதழ்களின் வார்த்தைக்கு
கண்ணீர் சிந்தியது எனதிரு கண்கள்...!
பெற்றவளை விட்டு விட வேண்டாம்...!
காலத்தின் முதிர்சியில்... உடலின் தளர்ச்சியில்...
உடனிருந்து தாங்குவோம்... உள்ளத்தின் அன்போடு...
Written by JERRY