குடும்பத்தில் மகிழ்ச்சி பெருக

குடும்பத்தில் பெருமகிழ்ச்சி நிலவவேண்டு மென்றால்
***குறைவில்லாப் பாசமொன்றே இன்பத்தைக் கூட்டும் !
கொடுப்பதனால் அழியாத அன்பென்னும் பண்பைக்
***கொண்டிருப்போர் இல்லத்தில் ஆனந்தம் பூக்கும் !
கடுகளவும் சந்தேகம் உட்புகாத வண்ணம்
***கருணையுடன் அன்பொன்றே அரணாகக் காக்கும் !
தடுமாற்ற மில்லாமல் பயணத்தைத் தொடர
***தன்னலமில் லாஅன்பே தாயைப்போல் தாங்கும் !

பணமிருந்தும் ஏதோவொன் றிழந்தாரைப் போலப்
***பாசத்திற் கேங்குவோரும் பாரினிலே உண்டே !
உணர்வுகளை வெளிக்காட்டாப் பாசத்தால் கூட
***உபயோக மில்லையென்றே உணர்ந்திடுவீர் நன்றே !
பிணக்கில்லா வாழ்விற்கு வழிவகுக்கும் அன்பால்
***பேரின்ப மடைந்திடலாம் பிடிவாதம் கொன்றே !
வணக்கத்திற் குரித்தான குணநலனெ தென்றால்
***மகிழ்ச்சியினை மலரவைக்கும் பாசமென்ற வொன்றே !!

உரிமையான இடத்தினிலும் கோபம்தான் சாபம்
***உறவுகளின் மேன்மையினை வலுப்படுத்தும் நேசம் !
புரிந்துணர்வு கொள்வதற்கோ உள்ளத்தில் பாசம்
***பூத்தால்தான் நிறைந்திருக்கும் அகம்முழுதும் வாசம் !
கரியமில வளிநுகர்ந்தால் திணறாதோ சுவாசம்
***கடுஞ்சொற்கள் உமிழ்ந்துவிட்டால் விளைந்திடுமே நாசம் !
பரிவான வார்த்தைகளே தென்றலாக வீசும்
***பக்குவமாய் உணர்ந்துகொண்டால் பெருமகிழ்ச்சி சேரும் !

கூட்டாக வாழ்ந்திருந்த நிலையிங்கின் றில்லை
***கோடிகளில் புரண்டாலும் பாசமின்றேல் தொல்லை !
வாட்டமுற்ற மனத்திற்குப் பாசந்தான் மருந்து
***வாழ்வினிலே ஆனந்தம் அளிக்கும்நல் விருந்து !
ஆட்டுவிக்கும் ஆசைகளால் அழிவுதானே மிஞ்சும்
***அன்புமனம் கனிந்துவிட்டால் மகிழ்ச்சியங்கே தஞ்சம் !
வீட்டிலுள்ளோர் உள்ளங்கள் பாசத்தால் விரிந்தால்
***விடைபெற்றுச் சென்றிடுமே துன்பங்கள் விரைந்தே !!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (21-Nov-17, 2:35 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 229

மேலே