எங்கோ இசைத்த பாடலிலே

எங்கோ இசைத்த பாடலிலே
இதயம் அமைதி கொண்டதடி !
மங்கை யுன்றன் குரல்போலும்
மனதை மயங்க வைத்ததடி !
வங்கக் கடலின் அலையொலியாய்
வசியம் செய்து சென்றதடி !
சங்கத் தமிழின் இனிமையைப்போல்
சந்தம் கொஞ்சி அணைத்ததடி !

தனிமை வாட்டும் வேளையிலே
தாகந் தீர்க்கும் சுகவிருந்தாய்
வனிதை உன்றன் தேன்குரலும்
வளைய வந்து மோதுதடி !
பனியாய் உருகச் செய்ததடி
பன்னீர் மணமாய் நிறையுதடி !
கனிவாய் நெஞ்சை வருடுதடி
காற்றில் மெல்லக் கலந்துவந்தே !

தேனை யுண்ட வண்டிசையோ
தென்றல் பாடும் ராகமிதோ
மீனை யொத்த விழியுடையாள்
மீட்டும் மதுர கானமிதோ
மோனை எதுகை நயத்தோடு
முழங்கும் கவிதைப் பாச்சரமோ
ஊனை யுருக்கி விட்டதடி
உள்ளம் உரசிக் கொன்றதடி !

யாழின் இசையும் தோற்குதடி
என்றன் நிலையை என்சொல்ல ?
சோழி உருட்டி விட்டாற்போல்
சொக்கிச் சிலிர்க்க வைத்ததடி !
தோழி! நீயென் அருகிருந்தால்
சோகம் யாவும் மறைந்துவிடும் !
வாழி என்று வாழ்த்திசைக்க
வருவாய் வண்ணக் கனவினிலே !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (25-Nov-17, 9:33 pm)
பார்வை : 88

மேலே