கண்ட நாள் முதலாய்-பகுதி-32

....கண்ட நாள் முதலாய்....

பகுதி : 32

வீட்டிற்கு மிகவும் அத்தியாவசியமாகத் தேவையான பொருட்களை மட்டுமே அப்போதைக்கு இருவருமாகத் தேர்வு செய்தார்கள்...பலதில் இருவரின் விருப்பங்கள் வேறு ஒத்துப் போனதால் விரைவிலேயே பொருட்களை தெரிவு செய்தும் முடித்திருந்தார்கள்...

அனைத்திற்குமான பணத்தினைச் செலுத்தி,புதிய வீட்டினுடைய முகவரியையும் வழங்கிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்கள்...புதிய வீட்டில் அரவிந்தனுடைய அப்பாவே நின்று அனைத்துப் பொருட்களையும் ஒழுங்குபடுத்துவதாய் கூறியிருந்ததால்,அங்கே செல்ல வேண்டிய தேவை அவர்கள் இருவருக்குமே இருக்கவில்லை...

"இன்னைக்கு அப்பா அங்க நின்னு எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்னு சொன்னார்...நாம நாளைக்குப் போய் அந்தந்த இடங்கள்ல எல்லாத்தையும் ஒழுங்குபடுத்திட்டு வருவோம்..."

"ம்ம்....சரி அரவிந்தன்..."

அரவிந்தனின் மனம் உடனேயே வீட்டிற்குச் செல்வதை விரும்பவில்லை....அதனால்,

"நாம வேற எங்கையாச்சும் போவமா துளசி...??.."

அவளும் அப்போது அதைத்தான் யோசித்துக் கொண்டிருந்தாள்...அதனால் உடனேயே அவளது சம்மதத்தை தெரிவித்துவிட்டாள்...

"ம்ம் போலாமே..."

"ம்ம்...எங்க போலாம்...??..."

"உன்னுடனென்றால் எங்கும் வருவேன்.."என்று அவள் உள் மனம் சொன்னாலும்...வெளியில்,

"நீங்களே சொல்லுங்க அரவிந்தன்...??.."

"ம்ம்...கோவிலுக்குப் போவமா துளசி...??.."

"ம்ம்...சரி....அப்போ பக்கத்தில இருக்கிற சிவன் கோவிலுக்குப் போவோம்..."

"உத்தரவு மகாராணியே..."என்றவாறு அவன் கைகள் இரண்டையும் ஸ்டயரிங்கில் இருந்து எடுப்பது போல் பாவனை செய்யவும்,பதறிப் போன துளசி ஸ்டயரிங்கோடு சேர்த்து அவனது கைகளையும் பற்றிக் கொண்டாள்...

அவன் காரை ஓரமாய் நிறுத்திய பின்னர்தான் தனது கைகளுக்குள் அவனது கைகள் அடங்கியிருந்ததையே அவள் கண்டு கொண்டாள்...நாணம் அவளைச் சூழ்ந்து கொள்ள மெது மெதுவாய் கரங்களை உருவிக் கொண்டாள் துளசி...

அவளது நாணம் ததும்பிய முகம் அரவிந்தனுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகளை ஊடுருவ,விசிலடித்தவாறே மீண்டும் காரினை ஸ்டார்ட் செய்து கொண்டான்...

ஏற்கனவே அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் மறுபுறமாய் தலையைத் திருப்பி வெட்கத்தை மறைத்துக் கொண்டவள்,அவனது உல்லாசமான விசில் சத்தத்தில் மேலும் நாணம் அவளைத் தடுக்க கோவில் வந்து சேரும் வரை தலையை அவன் பக்கம் திருப்பாமலேயே வந்தாள்...

"ஹலோ மேடம்,கோவில் வந்தாச்சு...இனியாச்சும் என் பக்கம் காத்து வீசுமா...??.."

அவனது கேலியில் முகம் சிவக்க அவனை நிமிர்ந்து பார்த்தவள்,அவனது முகத்தில் இருந்த கள்ளமான சிரிப்பில் அவளை அவளே மறந்துதான் போனாள்...அப்படியே அங்கே இருவரின் கண்களும் கதை பேசிக் கொண்டிருக்க,கோயில் மணியோசையிலேயே நிகழ்காலத்தை வந்தடைந்தார்கள் இருவரும்...

காரைவிட்டு இறங்கிய இருவரும் ஆலயத்தினுள் நுழைந்து கொண்டார்கள்...

அவளோடு இணைந்து,அவள் கையோடு கை உரசிய வண்ணம் கோவிலுக்குள் நுழைகையில் அவன் மனதினுள் எழுந்த உணர்வலைகளை,அவ்வளவு எளிதில் வார்த்தைகளில் கூறிவிட முடியாது...

கோவில் பிரகாரத்தைச் சுற்றிக் கும்பிட்டவர்கள்...பிரசாதத்தை வாங்கிக் கொண்டு மணல் ஓரமாய் சென்று அமர்ந்து கொண்டார்கள்...இருவர் மனமுமே அந்த ஆலயச் சூழலில் சாந்தமடைந்திருந்தது...

துளசி பெரிதாக கோவில்களுக்குச் செல்வதில்லை...அவளைப் பொறுத்தவரையில் இறைவனை எங்கு வழிபடுகிறோம் என்பதை விட எப்படி வழிபடுகிறோம் என்பதையே முக்கியமாகக் கருதுபவள்...அதனால் அவள் வீட்டிலேயே கடவுளைத் தரிசித்துக் கொள்ளும் வழக்கமுடையவள்..ஆன போதிலும் இன்று அரவிந்தனோடு அவள் கோவிலுக்கு வரவே மனதில் எண்ணியிருந்தாள்...அதேயே அவனும் கேட்டத்தில் உள்ளூரக் கொஞ்சம் பூரித்துத்தான் போனாள்...

அவள் அதை யோசித்து மகிழ்ந்தவாறே பிரசாதத்தை சாப்பிட,அவள் முகத்தில் குடியிருந்த ஆர்ப்பாட்டமில்லாத அழகினையே ரசித்துக் கொண்டிருந்தான் அரவிந்தன்...அதை எதேட்சையாக அவன் பக்கமாய் திரும்பிய துளசியும் கண்டு கொண்டாள்...அவனது பார்வையில் லேசாக முகம் சிவந்தவள்,பார்வையை அவனிடத்திலிருந்து விலக்கி வேறுபுறம் பார்த்தாள்...

அவளது வெட்கத்தைக் கண்டு தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டவன்,அவளைப் பார்வையால் விழுங்கியவாறே பிரசாதத்தை உண்டு முடித்தான்...அவனது பார்வையை அவள் உணர்ந்திருந்தாலும்,மறந்தும் அவள் அவன் பக்கமாய் விழிகளைத் திருப்பவில்லை...

சிறிது நேரம் அப்படியே அமைதியாகக் கழிய,அந்த மௌனத்தை இருவருமே ஒருசேரக் கலைத்தார்கள்...

"கிளம்புவமா..??.."என்று இருவருமே ஒரே நேரத்தில் கேட்க,இருவருக்குமே புன்னகை வந்து இதழ்களில் ஒட்டிக் கொண்டது...ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டவர்கள் காரை நோக்கிச் சென்றார்கள்...

கார் வேகமெடுத்து சாலையில் சென்று கொண்டிருந்தது...இருவருமே தம் தம் சிந்தைக்குள் முழ்கிக் கொண்டார்கள்...அரவிந்தனின் மனம் சொல்ல முடியாதளவு மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தது...துளசி மனதளவில் தன்னிடம் நெருக்கமாகிக் கொண்டு வருகிறாள் என்ற எண்ணமே அவனை இறக்கையின்றி விண்ணிற்கும் மண்ணிற்குமாய் பறக்கச் செய்தது..

துளசிக்கோ தன் மனதில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றங்களை நினைத்து ஒருபக்கம் சந்தோசமாகவும்,மறுபக்கம் வியப்பாகவும் இருந்தது...அரவிந்தனிடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அவள் தன் வசத்தை இழக்கத் தொடங்கியிருந்தாள்...அவனின் ஒவ்வொரு நடவடிக்கைகளாலும் அவள் மனதை அவன் அசைக்கத் தொடங்கியிருந்தான்...

மொத்தத்தில் துளசி அரவிந்தனிடத்தில் அவள் மனதைப் பறிகொடுக்கத் தொடங்கியிருந்தாள்...இப்போதெல்லாம் அவளை அந்தப் பழைய நினைவுகள் ஆட்கொள்வதில்லை...மாறாக அவள் உள்ளமெங்கிலும் அரவிந்தன் ஒருவனே ஆட்சி புரியத் தொடங்கியிருந்தான்...

இருவரும் தமது நினைவுகளிலேயே மூழ்கி இருந்ததில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை...ஆனாலும் அவர்களின் இதயங்கள் இரண்டும் அவர்களுக்கே தெரியாமல் உறவாடத் தொடங்கியிருந்தது...ஒருவருக்குள் ஒருவர் அறியாமலேயே முழ்கி இருக்க,அவர்கள் வீட்டை வந்தடைந்தார்கள்...

வீட்டினில் நுழைந்தவர்கள்,அனைவரிடமும் பொருட்கள் வாங்கிய விபரங்களைத் தெரிவித்துவிட்டு மேலே சென்றார்கள்...ப்ரஷாகி உடைமாற்றிவிட்டு வந்ததுமே துளசி தேநீர் தயாரிப்பதற்காய் கீழே செல்லத் தயாரானாள்...ஆனால் அதற்கு முதலே அர்ச்சனா இருவருக்குமான டீ கப்புகளோடு ஆஜராகியிருந்தாள்...

"சுடச் சுடச் தேநீர்...யாருக்கு வேணும்...?"

அவள் வந்து நின்ற தோற்றத்தைக் கண்டு வாய்விட்டு நன்றாகச் சிரித்தவள்,

"என்ன அர்ச்சனா...ஒரே டீ சேர்விஸ்ஸா இருக்கு...??.."

"இப்படி இப்படி எல்லாம் நான் உங்களை கவனிச்சாத்தானே...நீங்க அப்படி அப்படி எல்லாம் என்னைக் கவனிப்பீங்க...??.."என்றவாறே கண்ணைச் சிமிட்டியவள்,துளசியின் கையில் டீ கப்புகளைத் திணித்துவிட்டு சிட்டாகப் பறந்துவிட்டாள்...

அவள் சென்றதும் கதவினைச் சாத்தியவள்,அப்போதுதான் உடைமாற்றிவிட்டு வந்த அரவிந்தனிடம் ஒரு டீ கப்பைக் கொடுத்துவிட்டு மறு கப்போடு அவனுக்கு எதிர்புறமாய் அமர்ந்து கொண்டாள்...

"நாளைக்கு ஏர்லி மோர்னிங்கா நம்ம வீட்டுக்குப் போய் எல்லாத்தையும் ஒழுங்குபண்ணிட்டு வருவம் துளசி...நாளைக்கு எல்லா வேலையையும் முடிச்சிட்டா,அப்புறம் நம்ம திங்ஸ்ஸை மட்டும் கொண்டு சேர்த்தா சரி...."

"ம்ம்....ஓகே அரவிந்தன்....நாம இன்னைக்கு நைட்டே நம்ம திங்ஸையும் கொஞ்சம் கொஞ்சமா அடுக்க ஆரம்பிப்போம்..இன்னும் நமக்கு நாலு நாள்தான் அவகாசமிருக்கு....அதிலையும் இரண்டுநாள் அப்பா அம்மா வீட்டில தங்கியாகனும்...அதனால நம்மகிட்ட இன்னும் இரண்டுநாள்தான் டைம் இருக்கு அரவிந்தன்..."

"ம்ம்....அதுவும் சரிதான்....இந்த இரண்டு நாளைக்குள்ள நாம எல்லாத்தையும் முடிச்சிடலாம் துளசி...நாம சேர்ந்து பண்ணிணா எல்லாம் சீக்கிரமா முடிஞ்சிடும்..."என்று அவன் கூறி முடிக்கவும் சங்கரனிடமிருந்து அழைப்பு வந்தது அவனுக்கு...

"ஹலோ சொல்லுங்கப்பா..."

"........"

"ம்ம்....ஓகே பா....ரொம்ப தாங்ஸ்...."

"........."

"ம்ம்...சரி பா....நான் சொல்லிடுறேன்...."என்றவாறே அழைப்பினை முடித்துக் கொண்டவன்,

"எல்லாப் பொருட்களும் வந்திடுச்சாம்....ஹோல்ல எல்லாத்தையும் வச்சிருக்காம்...நாம நாளைக்குப் போய் ஒழுங்குபண்றதுதான் வேலை..."என்றவாறே எழுந்து கொண்டவன்,அவளோடு சேர்ந்து கீழே சென்றான்....

கீழே வந்ததும்,யசோதாவிற்கு உதவியாக துளசி இரவு உணவினைத் தயாரிக்க சமையலறைக்குள் நுழைந்து கொள்ள,தானும் சென்று டீ கப்பினைக் கழுவி வைத்தவன் அம்மாவினுடைய அறையை நோக்கிச் சென்றான்....

அறையினுள் அர்ச்சனாவும் பார்வதியும் பேசிக் கொண்டிருக்க உள் நுழைந்தவன்,

"அம்மா...அப்பா யோகேஷ் மாமா கூட எங்கேயோ வேலையா வெளியில போறாறாம்...வர லேட்டாகும்னு உங்களுக்குத் தகவலை அனுப்பி விடச்சொன்னார்..."

"ம்ம்....சரி பா...."

அப்போது "என்ன மாப்பிளை சேர் இன்னைக்கொன்னும் தோட்டத்துப் பக்கம் போகலையா...??..."என்று வம்புக்கு வந்தாள் அர்ச்சனா...

"தோட்டத்துப் பக்கம் ஒரே கொசுத் தொல்லையா இருக்கு..."என்று அவளை ஊன்றி நோக்கியவாறே சொன்னவன்,"அதான் இனி வேற இடம் பார்க்கலாம்னு இருக்கோம்..."என்று சேர்த்துக் கூறி அவளது முறைப்பினையும் பரிசாகப் பெற்றுக் கொண்டான்..

அதன் பின் இரவு உணவிற்காய் துளசி அனைவரையும் அழைக்க,அப்போதைக்கு சண்டையைத் தள்ளி வைத்துக் கொண்ட இருவரும்,சாப்பாட்டில் ஐக்கியமாகிக் கொண்டார்கள்...பார்வதி மட்டும் அரவிந்தனுடைய அப்பா வந்ததும் சாப்பிட்டுக் கொள்வதாக கூறிவிட,மற்றவர்கள் இரவு உணவினை முடித்துக் கொண்டு நித்திரைக்குத் தயாரானார்கள்...

முதலே பேசியது போல் முடிந்தவரை தமது பொருட்களை இருவருமாகச் சேர்ந்து பைகளில் பிரித்து அடுக்கியவர்கள்...அரைவாசி அளவிற்கு வேலை முடிந்ததும் கண்களில் நித்திரை சுழன்றடிக்க தூக்கத்தை துணைக்கழைத்துக் கொண்டார்கள்...

அன்று முழுவதற்குமான இனிமையான நினைவுகளோடே இருவரும் கட்டிலின் ஒவ்வொரு புறங்களிலும் உறங்கிக் கொள்ள...இருவர் மனங்களிலுமே மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருந்ததால் கண்களை மூடிக் கொண்டதுமே இருவரையும் தூக்கம் தழுவிக் கொண்டது...


இனிமைகள் தொடரும்....

எழுதியவர் : அன்புடன் சகி (27-Nov-17, 11:09 pm)
பார்வை : 574

மேலே