ஓடிவா தம்பி ஓடிவா

ஓடிவா தம்பி ஓடிவா - நீ
ஓய்வின்றி உழைத்திட ஒடிவா
உள்ளத்தில் லட்சியம் ஊன்றியே - மன
உளைச்சல் அனைத்தையும் தாண்டிவா

வழியினில் வருத்தும் தடைகளை - நீ
குழியினில் புதைத்தே எழுந்துவா
விதியினை மாற்றி அமைத்திட - உன்
மதியினை பெருக்கிட விரைந்துவா

சீறிடும் சிங்கக் கூட்டத்தை - ஒரு
சிறுநரி எதிர்த்திட முடியுமா ?
கடுங்கதிர் கொடுத்திடும் ஒளியினை - அந்த
கடும்பனி மூட்டங்கள் மறைக்குமா?

உழைத்திடும் எண்ணம் ஊறினால் - நீ
உயர்வது திண்ணம் உணர்ந்திடு
சோம்பல் உடலில் ஏறினால் - பெரும்
தீம்பலை சேர்த்திடும் அறிந்திடு

வியர்வையில் உயர்ந்திடும் போதினில் - அந்த
வானமும் வையமும் உனைத்தொழும்
நீதியில் நேர்மையில் நடந்திடில் - உனை
நெருப்பாய் உலகமும் நினைத்திடும்

வைரக்கல் போன்றே மனம்கொண்டு - நீ
வைத்திடும் ஒவ்வொரு அடிகளும்
வெற்றிப் படிகளை அமைத்திடும் - உன்
வீரத்தை பூமிக்கு உணர்த்திடும்

உழைப்பால் உள்ளம் உரப்படட்டும் - நீ
தழைத்திட அதுவே விதையிடட்டும்
ஒவ்வொரு நாளும் துணைவரட்டும் - நீ
ஓங்கி உயர்ந்திட வழிதரட்டும்.

பாவலர். பாஸ்கரன்

எழுதியவர் : (29-Nov-17, 9:22 pm)
பார்வை : 89

மேலே